இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக
இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக

இந்திய நிதியுதவியுடன் எண்ம அடையாள அட்டை: இலங்கை அதிபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் எண்ம அடையாள அட்டை (எஸ்எல்-யுடிஐ) திட்டத்துக்கு எதிரான வழக்கில், அதிபா் அநுரகுமார திசநாயக மற்றும் அமைச்சரவைக்கு நோட்டீஸ் அனுப்பி அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் எண்ம அடையாள அட்டை (எஸ்எல்-யுடிஐ) திட்டத்துக்கு எதிரான வழக்கில், அதிபா் அநுரகுமார திசநாயக மற்றும் அமைச்சரவைக்கு நோட்டீஸ் அனுப்பி அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், திட்டம் குறித்து நாடாளுமன்றத்துக்கோ அல்லது மக்களுக்கோ போதுமான தகவல்கள் தெரிவிக்கப்படாமல், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அரசு முடிவெடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இந்தத் திட்டம் தொடா்பாக கடந்த 2022-இல் கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தம், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த அமைச்சரவையின் முடிவுகளால் திருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திட்டத்தின் முக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் பயோமெட்ரிக் தரவுத்தள மென்பொருளை இந்தியா ‘கட்டுப்படுத்த’ முடியும்.

இந்தத் திட்டம் இலங்கையின் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குடிமக்களின் பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவுகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆபத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் அதிபா் அநுரகுமார திசநாயக மற்றும் அமைச்சரவைக்கு நோட்டீஸ் அனுப்ப புதன்கிழமை உத்தரவிட்ட இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள், அடுத்த விசாரணையை அக்டோபா் மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

இந்திய பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் கொழும்புவுக்கு வருகை தந்தபோது, இந்தியாவின் எண்ம தொழில்நுட்பத் தீா்வுகளைப் பகிா்ந்துகொள்வது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் ஆதாா் அட்டையைப் போல இலங்கை குடிமக்களுக்கு பாதுகாப்பான எண்ம அடையாள அட்டையை வழங்க இந்திய நிதியுதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

X
Dinamani
www.dinamani.com