
ஜப்பான் நாட்டின் ஒரு சிறிய நகரமான டோயோக்கேவில் (டோக்யோ அல்ல) வாழும் மக்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, செல்போனுக்கு உலக மக்கள் அடிமையாகி வருவது குறித்த கவலையும் விவாதமும் அதிகரித்து வரும் நிலையில், டோயோக்கேவின் மேயர் இந்த புதிய விதிமுறையை உருவாக்கி அறிவித்துள்ளார்.
ஜப்பானில் இந்த புதிய விதிமுறை உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. டோயோக்கேவில் வாழும் 69 ஆயிரம் மக்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்றாலும், இது கண்டிப்புடன் பயன்படுத்தப்போவதில்லை என்றும், ஒரு வலியுறுத்தலாக மட்டுமே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக நேரம் செல்போன் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள மக்களுக்கு வலியுறுத்தும் விதமாக இந்த விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விதிமுறைக்கு வரும் அக்டோபர் மாதம் ஒப்புதல் கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
இது மக்களின் உரிமையைப் பறிப்பதாகவோ, அபராதம் விதிக்கும் வகையிலோ உருவாக்கப்படவில்லை என்றும், மக்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் இந்தக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்படுவதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஏதேனும் வேலை செய்துகொண்டே சமையல் செய்துகொண்டே, ஆன்லைனில் படித்துக்கொண்டே, ஆன்லைன் விளையாட்டுப் போட்டி பயிற்சிகள் இதில் கணக்கெடுக்கப்படாது, ஓய்வாக அமர்ந்து செல்போன் பார்க்கும் நேரம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இரவில் பல மணி நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க உதவும், பலருக்கும் இதுபோன்று தொடர்ந்து செல்போன் பார்ப்பதால் மன நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் வந்த தகவலையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய விதிமுறைப்படி, இளம் தலைமுறையினர், இரவு 7 மணிக்குப் பிறகு செல்போன் பார்க்க வேண்டாம் என்றும், பெரியவர்கள் இரவு 8 மணிக்குப் பிறகு செல்போன் பார்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.