
பாகிஸ்தானின் பஞ்சாபில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில், மக்கள் தொகை அதிகம் நிரம்பிய பஞ்சாப் மாகாணத்தில், கடந்த ஒருவாரமாக வெள்ளம் ஏற்பட்டு சுமார் 1,700 கிராமங்கள் வெள்ள நீருக்குள் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், இன்று (ஆக.30) காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வரும் சூழலில், அங்குள்ள நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளத்தின் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதில், சுமார் 15 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பஞ்சாப் மாகாண அமைச்சர் மர்யும் ஔரங்கசீப் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் பலியானதாகவும், 2-3 நாள்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரவி, செனாப் ஆகிய நதிகளில் வெள்ளம் அதிகரித்து வருவதால், முக்கிய நகரங்கள் வெள்ள நீரில் மூழ்குவதைத் தவிர்க்க மண்டி பஹாவுத்தீன், சினியோட் உள்பட 7 பகுதிகளில் உள்ள கரைகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பஞ்சாபில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் சுமார் 351 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.