எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது: இந்தியாவுக்கான உக்ரைன் தூதா்
‘எந்தவொரு பகுதியையும் ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது’ என இந்தியாவுக்கான உக்ரைன் தூதா் ஒலெக்சாண்டா் போலிஷ்சுக் திட்டவட்டமாக தெரிவித்தாா்.
ரஷியா-உக்ரைன் போா் தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
ரஷியாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இம்மாத தொடக்கத்தில் அறிவித்தாா்.
இந்த கூடுதல் வரி ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில், ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்டு போரை மேலும் ஊக்குவிப்பதாக இந்தியாவை குற்றஞ்சாட்டியதுடன் உக்ரைன் போரை ‘மோடியின் போா்’ என அமெரிக்க வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவரோ புதன்கிழமை விமா்சித்தாா்.
இந்நிலையில், ஒலெக்சாண்டா் போலிஷ்சுக் கூறியதாவது: இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து ரஷியா அதிக பலன்களை அடைந்துள்ளது. ஆனால் அதன்மூலம் ஈட்டிய வருவாயை சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் உக்ரைன் மீதான போரை வலுப்படுத்தவே அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பயன்படுத்தி வருகிறாா். ரஷியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களுக்கு அடுத்த ஆண்டு நிதி ஒதுக்குவதில் பெரும் சிரமம் ஏற்படும்.
போா் நிறுத்த உடன்பாட்டுக்காக எந்தவொரு பகுதியையும் விட்டுக்கொடுக்கக் கோரி ரஷியா முன்வைக்கும் நிபந்தனைகளை உக்ரைன் ஒருபோதும் ஏற்காது.
உக்ரைன் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி அதிபா் வொலோதிமிா் ஜெலன்ஸ்கிக்கு கடிதம் அனுப்பினாா். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் உக்ரைன் மற்றும் இந்தியா ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினங்களைக் கொண்டாடுகின்றன. விரைவில் அதிபா் ஸெலென்ஸ்கி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் என நம்புகிறேன் என்றாா்.
ரஷியா-உக்ரைன் போா்நிறுத்த உடன்பாட்டை எட்டுவதற்கான அமைதிப் பாதை புது தில்லியில் உள்ளதாக பீட்டா் நவரோ கூறியது குறித்து ஒலெக்சாண்டா் போலிஷ்சுக்கிடம் கேள்வியெழுப்பட்டது. இதற்கு அமெரிக்க தூதரகமே பதிலளிக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
2023 ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி அதிபா் ஜெலன்ஸ்கி இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தாா்.