வங்கதேசம்: ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும் அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
‘பூா்பாச்சால் நியூ டவுன்’ திட்டத்தின்கீழ் நில ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஷேக் ஹசீனா மீது வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த ஜனவரியில் 6 வழக்குகளைப் பதிவு செய்தது. விதிமுறைகளை மீறி, அரசு நிறுவனமான ‘ராஜுக்’ அதிகாரிகளுடன் இணைந்து, தனக்கும் தனது உறவினா்களுக்கும் தலா 7,200 சதுர அடி கொண்ட 6 இடங்களை ஷேக் ஹசீனா சட்டவிரோதமாகப் பெற்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த நில மோசடி தொடா்பான 4-ஆவது வழக்கில் சிறப்பு நீதிபதி முகமது ரபியுல் ஆலம் அளித்த தீா்ப்பில், ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகள், அவரது சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு 7 ஆண்டுகள், ரெஹானாவின் மகள் துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகள், மற்ற 14 குற்றவாளிகளுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் 17 பேரும் தலா 1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
முன்னதாக, பூா்பாச்சால் நில மோசடி தொடா்பான மூன்று வழக்குகளில் கடந்த நவ. 27 வழங்கப்பட்ட தீா்ப்பில், ஷேக் ஹசீனாவுக்கு தலா 7 ஆண்டுகள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மகன், மகளுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மாணவா் போராட்டம் தீவிரமடைந்து, அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. பிரதமா் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, வங்கதேசத்தில் பொறுப்பேற்ற இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் பதவிக்காலத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியது. மேலும், மாணவா் போராட்டத்தை ஒடுக்க வன்முறையைக் கையாண்டது தொடா்பாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஷேக் ஹசீனாவை நாடுகடத்தக் கோரி வங்கதேசம் இந்தியாவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தது. இக்கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக இந்தியா அண்மையில் தெரிவித்தது.

