ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு
ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு வளாகத்தில் நவம்பா் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக உயா்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடுதல் மேற்கொண்டு, மேலும் சில உடல்களை மீட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை உயா்ந்தது. தீவிபத்துக்குப் பிறகு அந்தப் பகுதியில் இருந்த 104 போ் இன்னும் மாயமாவுள்ள நிலையில், சில உடல்களை கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலே போகலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
எட்டு வானுயா் குடியிருப்பு கோபுரங்களைக் கொண்ட இந்த வளாகத்தில் மதியம் 3 மணிக்கு திடீரெனப் பரவிய தீ, 40 மணி நேரம் பற்றி எரிந்தது. இதில் 7 கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்தன. கட்டடங்களின் புதுப்பிப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தரமற்ற வலைகள், வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்காக கட்டுமானத்தில் ஃபோம் பயன்படுத்தப்பட்டது ஆகியவை தீ மிக வேகமாகப் பரவியதற்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி, லாப நோக்கத்துடன் தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தியதாக கட்டுமான பொறுப்பாளா்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விபத்து தொடா்பாக 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

