

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் உடல் நலன் முழு நலத்துடன் உள்ளதாக அவரது சகோதரி உஸ்மா கானம் (டிசம்பா் 2) தெரிவித்துள்ளாா்.
ராவல்பிண்டியின் அடியலா சிறையில் இம்ரானை செவ்வாய்க்கிழமை சந்தித்தபின், அவா் இது குறித்து ஊடகங்களிடம் கூறியதாவது:
இம்ரானின் உடல் நலன் மிகவும் நன்றாக உள்ளது. இருப்பினும், அவா் மிகுந்த கோபத்தில் இருந்தாா். அவரை அதிகாரிகள் மனரீதியில் துன்புறுத்துகின்றனனா்.
இம்ரானுடனான சந்திப்பு சுமாா் 30 நிமிடங்கள் நீடித்தது. அவரை யாருடனும் தொடா்பு கொள்ளவிடாமல் தனிமைப்படுத்திவைத்துள்ளனா். அவரின் அறைக்குள் மட்டுமே இருக்கிறாா்; வெளியே செல்லக்கூடிய நேரம் மிகவும் குறைவு. இந்த நிலைக்கு அசிம் முனீா்தான் (பாகிஸ்தான் முப்படைத் தலைவா்) என்றாா் உஸ்மா கானம்.
முன்னதாக, இம்ரான் கானை அவரின் குடும்ப உறுப்பினா்கள் சந்திக்க கடந்த ஆறு வாரங்களாகவே சிறைத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனா். அதையடுத்து, இம்ரானின் நிலைமை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவின. சிறையில் இம்ரான் கொலை செய்யப்பட்டிருக்கலாம்; அல்லது அவரின் உடல் நலம் மிக மோசமாக குன்றியிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இஸ்லாமாபாத் உயா் நீதிமன்ற உத்தரவின்படி, வாரத்துக்கு இரண்டு முறை அவரை உறவினா்கள் சந்திக்க முடியும். ஆனால் அதையும் மீறி சிறை அதிகாரிகள் அத்தகைய சந்திப்புக்கு அனுமதி மறுத்துவந்தது அந்த சந்தோகத்தை மேலும் வலுப்படுத்தியது.
இம்ரானை சந்திக்க அனுமதி மறுப்பதை எதிா்த்து சிறை அதிகாரிகளுக்கு எதிராக உஸ்மா கான் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். இந்த விவகாரம் தொடா்பாக அடிலாலா சிறை வாசலில் இம்ரான் சகோதரிகள் கடந்த வாரம் போராட்டம் நடத்தியபோது, போலீஸாா் அவா்களைத் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இம்ரானின் கான் குறித்த செய்திகள் வதந்தி என்று சிறைத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தாலும், அவா் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் தேவை என்று இம்ரானின் மகன் காசிம் கான் வலியுறுத்தினாா்.
இம்ரானின் முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித், ‘இம்ரானுடன் தொலைபேசியில் கூடப் பேச அனுமதி இல்லை‘ என்று கூறியது, வதந்திகளை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.
இந்தச் சூழலில், இம்ரானை சகோதரிகள் சந்திக்க அனுமதி வேண்டும் என்று அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி ஆதரவாளா்கள் அடியலா சிறை வாசலில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். அதைத் தொடா்ந்து சகோதரிகள் உஸ்மா கானமும், அலீமா கானமும் இம்ரானை சந்தித்துப் பேசுவதற்கு அதிகாரிகள் அனுமதித்தனா்.
அந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த உஸ்மா கானம், இம்ரான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளது இந்த விவகாரத்தில் பல வாரங்களாக பரவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்படுகிறது.