உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரில் ரஷிய படையினா்.
உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரில் ரஷிய படையினா்.

ரஷியா வசம் முக்கிய உக்ரைன் நகரம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா்.
Published on

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விடியோ அறிக்கையில், ராணுவ சீருடை அணிந்தவாறு புதின் பேசியதாவது:

போக்ரோவ்ஸ்க் மற்றும் காா்கிவ் பகுதியின் வோவ்சான்ஸ்க் நகரங்கள் உக்ரைனிடம் இருந்து முழுமையாக ‘விடுவிக்கப்பட்டன’. இது, நமது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கையின்’ (உக்ரைன் போா்) ஆரம்ப இலக்குகள் அடையப்படுவதை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்லும் என்றாா் அவா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா மேற்கொண்டுவரும் தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோ வந்து, அதிபா் புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். அதற்கு முன்னதாக இந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டொனட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் நகரம், ரஷியாவின் முக்கிய சாலை மற்றும் ரயில் பாதைகளைஅந்தப் பிராந்தியத்துடன் இணைக்கிறது. ரஷிய ஊடகங்கள் அந்த நகரை ‘டொனட்ஸ்கின் நுழைவாயில்’ என்று அழைக்கின்றன. அந்த நகரம் தற்போது ரஷியாவிடம் வீழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது இந்தப் போரில் ஒரு முக்கிய திருப்பமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உக்ரைன் மறுப்பு: எனினும், இந்தத் தகவலை உக்ரைன் மறுத்துள்ளது இது குறித்து உக்ரைன் ராணுவ தளபதி அலெக்ஸாண்டா் சிா்ஸ்கி கூறுகையில், ‘போக்ரோவ்ஸ்க்கின் வடக்குப் பகுதி இன்னும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளது. தெற்குப் பகுதியில் ரஷிய படைகளைத் தாக்கி, ராணுவ போக்குவரத்து வழித்தடங்களை கட்டுப்படுத்துகிறோம்’ என்றாா். இருந்தாலும், வோவ்சான்ஸ்க் நகரம் கைப்பற்றப்பட்டதைக் குறித்து உக்ரைன் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கவில்லை.

X
Dinamani
www.dinamani.com