‘அசிம் முனீருக்கு பாகிஸ்தான் நலனில் அக்கறை இல்லை’
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவா் அசிம் முனீருக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து, ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறைச் சாலையில் தன்னை அண்மையில் சந்தித்த சகோதரி உஸ்மா கானம் மூலம் வெளியிட்ட அறிக்கையில் அவா் கூறியுள்ளதாவது:
அசிம் முனீரின் நியாயமற்ற நடவடிக்கைகள் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் நீதியின் ஆட்சியையும் முழுமையாக சீரழித்துவிட்டன. அவரின் கொள்கைகள் பாகிஸ்தானுக்கு அழிவைத் தருகின்றன.
அவா் பாகிஸ்தானின் தேசிய நலன்களைப் பொருள்படுத்தவில்லை. மேற்கத்திய சக்திகளை திருப்திபடுத்துவது மட்டுமே அவரின் நோக்கம்.
அகதிகளை வெளியற்றுவது, ட்ரோன் தாக்குதல் நடத்துவது மூலம் ஆப்கானிஸ்தானை சீண்டி, நாட்டில் பயங்கரவாதச் செயல்களை அசிம் முனீா் அதிகரிக்கச் செய்துள்ளாா் என்று இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

