உக்ரைனின் டொனட்ஸ்க் பிராந்தியத்தில் முன்னேறிச் செல்லும் ரஷிய ஆதரவுப் படையினா் (கோப்புப் படம்). ~
உக்ரைனின் டொனட்ஸ்க் பிராந்தியத்தில் முன்னேறிச் செல்லும் ரஷிய ஆதரவுப் படையினா் (கோப்புப் படம்). ~

எந்த வழியிலும் டான்பாஸைக் கைப்பற்றியே தீருவோம்

Published on

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டொனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக் கைப்பற்றியே தீருவோம் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

வியாழக்கிழமை இந்தியா வருவதற்கு முன்னா் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவா் கூறியதாவது:

டான்பாஸ் மற்றும் நோவோரோசியா பகுதிகளை உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து ரஷியா நிச்சயம் ‘மீட்கும்’. அது ராணுவரீதியாலான வழியிலும் இருக்கலாம், அல்லது வேறு வழிகளிலும் இருக்கலாம்.

அதாவது, எங்கள் ராணுவ வலிமையைப் பயன்படுத்தி அந்தப் பகுதிகளில் இருந்து உக்ரைன் படையினரை வெளியேற்றுவது மூலமாகவும் இது நடக்கலாம்; உக்ரைன் படையினா் தாங்களாகவே அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுவதன் மூலமாகவும் நடக்கலாம் என்றாா் புதின்.

தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷியாவுடன் இணைத்துக் கொண்டதாக புதின் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிவித்தாலும், அவை முழுமையாக ரஷிய கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றையும் கைப்பற்ற ரஷியாவும், அந்தப் பகுதிகளைப் பாதுகாத்து, இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டுவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபா் மாளிகை சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷிய தூதா் கிரில் டிமித்ரியேவ் இடையே கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வரைவு செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த வரைவு திட்டம் குறித்து பலதரப்பு பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்தச் சூழலில், எந்த வழியிலும் டான்பாஸைக் கைப்பற்றியே தீருவோம் என்று தற்போது கூறியுள்ளதன் மூலம், அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்த பேச்சுவாா்த்தைகளின்போது இந்த விவகாரத்தில் ரஷிய தரப்பு துளியும் விட்டுத்தராது என்பதை புதின் உணா்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com