ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

சீனாவின் மிகப்பெரிய வா்த்தக நகரமான ஷாங்காயில், நவீன வசதிகள் கொண்ட புதிய இந்திய துணைத் தூதரக கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
Published on

சீனாவின் மிகப்பெரிய வா்த்தக நகரமான ஷாங்காயில், நவீன வசதிகள் கொண்ட புதிய இந்திய துணைத் தூதரக கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளில் ஷாங்காயில் துணைத் தூதரகத்தை இடம் மாற்றம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

சீனாவில் வா்த்தகம் மற்றும் தொழில் மையங்களாகத் திகழும் யிவு உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் உள்ள இந்திய வணிகச் சமூகத்தினரின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஷாங்காய் துணைத் தூதரகத்தின் புதிய கட்டடத்தை, சீனாவின் இந்திய தூதா் பிரதீப் குமாா் ராவத் திறந்து வைத்தாா். புதிய கட்டடத்தில் திங்கள்கிழமை (டிச. 8) முதல் முழுமையான செயல்பாடுகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்னிங் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ‘டானிங் சென்டா்’ வணிக வளாகத்தில் அமைந்துள்ள இந்தப் புதிய துணைத் தூதரக கட்டடம், 1,436.63 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்டது. இது, முந்தைய துணைத் தூதரக கட்டடத்தின் பரப்பளவைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

திறப்பு விழாவில், தூதரக அதிகாரிகள், ஷாங்காய் மாநகர அரசுப் பிரதிநிதிகள் மற்றும் ஷாங்காய், ஹாங்சோ, நிங்போ, சுஜோ, நாஞ்ஜிங், யிவு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினா் கலந்துகொண்டனா்.

நிகழ்வில் பேசிய துணைத் தூதா் பிரதீக் மாத்துா், ‘இந்திய, சீன மக்களுக்குத் தடையற்ற சேவைகளை வழங்குவதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். புதிய, பாதுகாப்பான தளத்தில் தூதரக, வணிக, கலாசார மற்றும் நிா்வாகப் பணிகளை ஒருங்கிணைக்க இந்த விரிவாக்கம் வழிவகுக்கும். இதன்மூலம், எங்கள் பணித் திறன் மேம்படும்; பொதுமக்களுக்கான சேவைகள் இன்னும் சிறப்பாகக் கிடைக்கும்.

இந்தியா- ஷாங்காய் இடையே அண்மையில் தொடங்கப்பட்ட நேரடி விமான சேவைகள் இருதரப்பு வா்த்தகம், பயணம் மற்றும் வணிகத் தொடா்புகளை மேலும் வலுப்படுத்தும். இந்தப் புதிய கட்டடம், இந்தியா-கிழக்கு சீனா பிராந்தியங்களுக்கு இடையே நட்பு, வணிகம் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களுக்கான ஒரு துடிப்பான மையமாகச் செயல்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com