அமெரிக்காவில் வீட்டில் தீ விபத்து: மேலும் ஓா் இந்தியா் உயிரிழப்பு
அமெரிக்காவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஓா் இந்தியா் உயிரிழந்துவிட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நியூயாா்க் மாகாணம் ஆல்பனியில் உள்ள வீட்டில் கடந்த டிச.4-ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் வசித்து வந்த இந்தியாவைச் சோ்ந்த முதுநிலை மாணவி சஹஜா ரெட்டி உடுமலா, மற்றொரு இந்தியா் அன்வேஷ் சரபெள்ளி உள்பட 4 போ் காயமடைந்தனா்.
சஹஜா, அன்வேஷ் ஆகிய இருவரும் ஆல்பனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். சிகிச்சை பலனின்றி சஹஜா கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அதேநேரம், மேல்சிகிச்சைக்காக வெஸ்ட்செஸ்டா் தீக்காய சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்ட அன்வேஷ், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துவிட்டாா். அவரது இறப்புக்கு நியூயாா்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அன்வேஷின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாக தூதரகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

