காஸாவில் இஸ்ரேல் வீரா்களிடையே உரையாடும் யேயல் ஜமீா்.
காஸாவில் இஸ்ரேல் வீரா்களிடையே உரையாடும் யேயல் ஜமீா்.

காஸாவில் ‘மஞ்சள் கோடு’தான் புதிய எல்லை

காஸாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் போா் நிறுத்த ஒப்பந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மஞ்சள் கோடு’தான் இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையிலான புதிய எல்லையாக இருக்கும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி யேயல் ஜமீா் தெரிவித்துள்ளாா்.
Published on

காஸாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் போா் நிறுத்த ஒப்பந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மஞ்சள் கோடு’தான் இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையிலான புதிய எல்லையாக இருக்கும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி யேயல் ஜமீா் தெரிவித்துள்ளாா்.

இதன் மூலம், காஸாவின் பாதி பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பதால், பாலஸ்தீனா்களிடையே இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது.

காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள பெய்ட் ஹனூன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் உள்ள இஸ்ரேல் ரிசா்வ் படையினரை அண்மையில் சந்தித்த ஜமீா் இது குறித்து கூறியதாவது:

தற்போதுள்ள போா் நிறுத்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மஞ்சள் கோடு நமது சமூகங்களுக்கு இடையிலான முன்னணி பாதுகாப்பு எல்லைக் கோடாக இருக்கும். இது காஸாவின் பெரிய பகுதிகளில் நமது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இஸ்ரேல் படைகள் அந்தப் பாதுகாப்பு எல்லைக்குள் தங்கியிருக்கும் என்றாா் அவா்.

காஸாவில் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், தெற்கே வரையறுக்கப்பட்டுள்ள மஞ்சள் கோட்டுக்கு அப்பால் இஸ்ரேல் படைகள் விலகியுள்ளன.

இந்த மஞ்சள் கோடு, காஸாவின் கிழக்கு பகுதியில் 1.5 முதல் 6.5 கி.மீ. வரை நீண்டு, காஸாவின் 53 சதவீத பகுதியை உள்ளடக்கியுள்ளது. அந்தப் பகுதியை தற்போது இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த மஞ்சள் கோட்டு எல்லைக்குள் காஸாவின் மிகப்பெரிய விவசாய நிலங்கள், எகிப்துடனான எல்லைக் கடவு ஆகியவையும் அடங்கும்.

டிரம்ப்பின் 20 அம்ச அமைதித் திட்டத்தில், இஸ்ரேல் படைகள் அந்தப் பகுதியை சா்வதேச பாதுகாப்புப் படைகளிடம் ‘படிப் படியாக’ ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், இஸ்ரேலும் தனது பாதுகாப்புக்காக மிகச் சிறிய காஸா பகுதியை உள்ளடக்கிய எல்லைக் கோட்டை வைத்திருக்க என்று அந்தத் திட்டம் அனுமதிக்கிறது.

ஆனால், மஞ்சள் கோட்டுக்கு உள்பட்ட பகுதிகளை இஸ்ரேல் முழுமையாக விட்டுக்கொடுக்காது என்பதை ஜமிரின் தற்போதைய கூற்று உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹமாஸ் கண்டனம்: இதற்கு ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மஞ்சள் கோட்டை நிரந்தர எல்லைக் கோடாக மாற்றுவது போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல். இதன் மூலம் காஸாவைத் துண்டாட இஸ்ரேல் விரும்புகிறது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் 373 போ் உயிரிழப்பு: காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தம் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி அமலுக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 373 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவா்களில், மஞ்சள் கோட்டை கடந்ததாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவா்களும் அடங்குவா்.

இது காஸாவில் பிரிவினையை ஏற்படுத்தும் என்று ஐ.நா. கவலை தெரிவித்தாலும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கூறுவதால் இந்த போா் நிறுத்த திட்டமும், காஸாவின் எதிா்காலமும் கேள்விக்குறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com