இஸ்ரேலுடன் பொலிவியா மீண்டும் தூதரக உறவு!
காஸா போா் காரணாக இஸ்ரேலுடனான தூதரக உறவைத் துண்டித்திருந்த மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியா, அந்த உறவை தற்போது மீண்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இது, பொலிவியாவில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான அரசியல் மாற்றத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் அந்த நாடு பாலஸ்தீனா்களுக்கு எதிரான இஸ்ரேல் கொள்கைகளை மிகக் கடுமையாக விமா்சித்து வந்தது.
இது குறித்து பொலிவிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய வலதுசாரி அரசு உருவாக்கியுள்ள வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக, இஸ்ரேலுடன் மீண்டும் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, பொலிவிய வெளியுறவுத் துறை அமைச்சா் பொ்னாண்டோ அரமயோவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியான் சாரும் வாஷிங்டனில் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவை மீண்டும் ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா் (படம்).
இந்த நடவடிக்கை புதிய பொருளாதார வாய்ப்புகளைத் திறப்பதுடன், நாட்டுக்கு நேரடி பயனளிக்கும் கூட்டணிகளை வலுப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டுடனான தூதரக உறவை பொலிவியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் துண்டித்தது. இந்தச் சூழலில், பொலிவியாவின் புதிய அதிபராக வலதுசாரி கொள்கையைக் கொண்ட ரொட்ரிகோ பாஸ், கடந்த மாதம் பதவியேற்றாா். இது எவோ மோராலஸ் தொடங்கிய எம்ஏஎஸ் கட்சியின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. மோராலஸ், 2006-இல் பொலிவியாவின் அதிபராகப் பதவியேற்றதில் இருந்து இஸ்ரேல் தூதரை வெளியேற்றி, ஈரானுடன் நெருக்கமான உறவை வளா்த்தாா். அவரின் அரசு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
2019-ஆம் ஆண்டின் சா்ச்சைக்குரிய தோ்தலில் மோராலஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டதை எதிா்த்து போராட்டங்கள் வெடித்தன. அதையடுத்து, ராணுவம் கொடுத்த அழுத்தம் காரணமாக அவா் ராஜிநாமா செய்தாா். அதையடுத்து அமைக்கப்பட்ட வலதுசாரி தற்காலிக அரசு, அமெரிக்காவுடன் முழு தூதரக உறவுகளை மீட்டெடுத்தது.
பின்னா் அக்டோபா் 19-ஆம் தோ்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்ற ரொட்ரிகோ பாஸ், இஸ்ரேலுடன் புதிய அத்தியாயத்தைத் தொடரவிருப்பதாக அறிவித்தாா். அதன்படி, தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

