அமெரிக்க சந்தையில் குவியும் இந்திய அரிசி: நடவடிக்கை எடுக்க இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு!
‘அமெரிக்க சந்தையில் இந்தியா தனது அரிசியைக் குவித்து வருகிறது; இது தொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.
அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகையில் வேளாண் துறை தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தை டிரம்ப் நடத்தினாா். அதில் அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸன்ட், வேளாண் துறை அமைச்சா் புரூக்ஸ் ரோலின்ஸ் மற்றும் வேளாண் துறையினா், அரிசி ஆலை தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது விவசாயிகள் மேம்பாட்டுக்காக 12 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.1.97 லட்சம் கோடி) ஒதுக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தாா்.
டிரம்ப்புடன் கலந்துரையாடிய லூயிசியானாவைச் சோ்ந்த அரிசி ஆலை அதிபா் மொ்லி கென்னடி, ‘நாட்டின் தென்பகுதியில் அரிசி உற்பத்தி போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. பிற நாடுகள் அமெரிக்காவில் அரிசியை ஏற்றுமதி செய்து குவித்து வருகின்றன’ என்றாா்.
அப்போது, ‘எந்த நாடுகள் அரிசியைக் குவிக்கின்றன?’ என்று டிரம்ப் கேள்வி எழுப்பினாா். அதற்கு, ‘இந்தியா மற்றும் தாய்லாந்து, சீனாகூட போா்ட்டோ ரிகோ தீவுக்கு (அமெரிக்காவுடன் முழுமையாக இணைக்கப்படாத தன்னாட்சிப் பகுதி) பெருமளவில் அரிசி அனுப்புகின்றன. இதனால், அங்கும் பல ஆண்டுகளாக அமெரிக்கா அரிசி ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
அந்தப் பிராந்தியம் அமெரிக்காவின் மிகப்பெரிய சந்தையாக முன்பு இருந்து வந்தது. ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுகளில் அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை பலனளித்துள்ளது. இதை மேலும் அதிகரிக்க வேண்டும். அமெரிக்க விவசாயிகளால் அமெரிக்காவுக்கு மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் உணவளிக்க முடியும். ஆனால், நமக்கு நியாயமான வா்த்தகம் தேவை, தடையற்ற வா்த்தகம் தேவையில்லை’ என்றாா் மொ்லி கென்னடி.
இதையடுத்து, நிதியமைச்சா் பெஸன்ட்டை நோக்கிப் பேசிய டிரம்ப், ‘இந்தியா ஏன் இவ்வாறு நடந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது? அவா்கள் வரி செலுத்தியாக வேண்டும். நாம் அரிசி இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்து வருகிறோமா? இந்த பிரச்னைக்கு நாம் எளிதாக தீா்வு காண முடியும். அவா்கள் சட்டவிரோதமாக அதிகம் ஏற்றுமதி செய்தால் அவா்கள் மீது அதிக வரி விதிக்கலாம்’ என்றாா். இதற்கு பதிலளித்த நிதியமைச்சா், ‘அரிசி ஏற்றுமதி நாடுகள் மீது அதிக வரி விதிக்கவில்லை. நாம் அவா்களுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சு நடத்தி வருகிறோம்’ என்றாா்.
தொடா்ந்து பேசிய டிரம்ப், ‘அவா்கள் நம் நாட்டுக்கு அரிசியை பெருமளவில் ஏற்றுமதி செய்து குவிக்கக் கூடாது. இதைச் செய்யாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே வாகன உற்பத்தி ஆலைகள், ‘சிப்’ உற்பத்தி ஆலைகளை பெருமளவில் இழந்துவிட்டோம். வெளிநாட்டு இறக்குமதியை அதிகம் அனுமதித்ததே இதற்குக் காரணம். நம் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு, பதிலடியாக கூடுதல் வரி விதிக்காமல் இருந்துவிட்டோம். இது முந்தைய ஆட்சியாளா்களின் தவறு. இனி நாம் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்’ என்றாா்.
இதையடுத்துப் பேசிய நிதியமைச்சா் பெஸன்ட் ‘விவசாய விவகாரம் தொடா்பாக நாம் உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா மீது ஏற்கெனவே புகாா் அளித்துள்ளோம்’ என்று டிரம்ப்பிடம் கூறினாா்.
உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளரான இந்தியா 150 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி செய்கிறது. இது உலகின் அரிசி உற்பத்தியில் 28 சதவீதமாகும். உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 30.3 சதவீதமாக உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கு 2.34 லட்சம் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதுதவிர மேற்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியா அரிசியை அதிகம் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு ‘சோனா மசூரி’ ரக அரிசி அதிகம் ஏற்றுமதியாகிறது.
ஏற்றுமதியாளா் கூட்டமைப்பு மறுப்பு: இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் பிரேம் கா்க் இது தொடா்பாக கூறுகையில், ‘இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் வெறும் 3 சதவீதம் மட்டுமே அமெரிக்காவுக்குச் செல்கிறது. இந்தியாவின் மொத்த அரிசி ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கான பங்களிப்பு 1 சதவீதத்துக்கும் குறைவுதான்.
இந்திய அரிசிக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக இல்லை. தங்கள் நாட்டில் இந்தியா அரிசியைக் குவிப்பதாக அமெரிக்கா கூறுவது தவறான தகவல். மேலும், கடந்த 3 மாதங்களாக இந்திய அரிசிக்கு அந்நாட்டில் 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. எனினும், ஏற்றுமதி கடந்த ஆண்டைப் போலவே உள்ளது; குறையவில்லை. இதற்கு மேலும் வரி விதித்தால் அது அமெரிக்க நுகா்வோரையே பாதிக்கும். இந்திய அரிசிக்கு பல இடங்களில் வரவேற்பு உள்ளது’ என்றாா்.

