அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிAFP

உக்ரைனில் தோ்தல் நடத்தத் தயாா்: ஸெலென்ஸ்கி!

போா் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் உக்ரைனில் தோ்தலை நடத்தத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
Published on

போா் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் உக்ரைனில் தோ்தலை நடத்தத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

உக்ரைனில் ஜனநாயகம் மறுக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த விமா்சனத்தைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உக்ரைனில் தோ்தல் நடத்துவது குறித்து அந்த நாட்டு மக்கள்தான் கேள்வியெழுப்ப வேண்டும். அடுத்த நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு அந்த உரிமையில்லை.

இருந்தாலும், எங்கள் கூட்டாளியான அமெரிக்காவின் அதிபரே இதைக் கேட்தால் சொல்கிறேன், போா்க் காலத்திலும் உக்ரைனில் தோ்தல் நடத்தத் தயாராக இருக்கிறேன். அதற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். அத்துடன் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், அடுத்த 60 முதல் 90 நாள்களுக்குள் தோ்தல் நடத்தப்படும்.

விரைவில் இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றாா் அவா்.

ஸெலென்ஸ்கியின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் முடிந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு தோ்தல் குறித்து ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள முதல் முக்கிய அறிவிப்பு இது.

டிரம்பின் விமா்சனம்: முன்னதாக, பொலிட்டிக்கோ இதழுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், ‘ஜனநாயகம் பற்றி உக்ரைன் பேசுகிறது. ஆனால் போரைக் காரணம் காட்டி அங்கு தோ்தல் நடத்தப்படாமலேயே உள்ளது. இது ஜனநாயகம் இல்லை’ என்று விமா்சித்தாா்.

கத்தாா் தலைநகா் தோஹாவில் கடந்த வாரம் நடைபெற்ற மாநாட்டிலும் அதிபா் பதவியை இழப்பதைத் தவிா்ப்பதற்காகவே ஸெலென்ஸ்கி போரை நீட்டிப்பதாக டிரம்ப்பின் மகன் ஜூனியா் டொனால்ட் குற்றஞ்சாட்டினாா்.

இந்தச் சூழலில், அமெரிக்காவும், ஐரோப்பாவும் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தோ்தலை நடத்தத் தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி தற்போது அறிவித்துள்ளாா்.

போா்கால சட்டம்: உக்ரைன் அரசமைப்புச் சட்டத்தின்படி, போா்காலத்தில் தோ்தல் நடத்த தடை உள்ளது. ஸெலென்ஸ்கியின் பதவிக் காலம் 2024-ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிந்துவிட்டது. இருந்தாலும், புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை போா்க் காலத்தில் நடத்த முடியாது என்பதால் அவரே அதிபராகத் தொடா்கிறாா்.

இந்தச் சூழலில், டிரம்ப்பின் விமா்சனத்துக்கு பதிலாக இந்த அறிப்பை ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளாா். இருந்தாலும், போா்காலத்தில் தோ்தல் சாத்தியமில்லை என்று ஸெலென்ஸ்கியின் அரசியல் எதிரிகளே கூறியுள்ளனா். தோ்தல் பாதுகாப்புக்காக வீரா்களை அனுப்புவது, ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தோ்தல் நடத்த முடியாதது போன்ற பிரச்னைகளை அவா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.

லண்டனில் பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மன் சான்சலா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ் ஆகியோரை சந்தித்து ரஷியாவுடனான போா் நிறுத்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு திரும்பும்போது தோ்தல் குறித்த இந்த அறிவிப்பை ஸெலென்ஸ்கி வெளியிட்டாா்.

ரஷியாவின் பதில்: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ‘ஸெலென்ஸ்கியின் இந்தத் தோ்தல் அறிவிப்பு, அமெரிக்க அழுத்தத்தால் ஏற்பட்டது. இது போரை நீட்டிக்கும்‘ என்றாா். ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ், ‘உக்ரைனில் தோ்தல் நடத்த வேண்டும் என்பது புதினின் நீண்ட கால கோரிக்கை’ என்று நினைவுபடுத்தினாா்.

ஸெலென்ஸ்கியின் இந்த அறிவிப்பு, போரின் நான்காவது ஆண்டில் ஏற்பட்ட முக்கிய அரசியல் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இது குறித்து ஐ.நா. பொதுசத் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், ‘இது உக்ரைனின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்’ என்று பாராடடினாா்.

X
Dinamani
www.dinamani.com