ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு தலிபான்களுடன் நடைமுறைக்குரிய தொடா்பு அவசியம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
‘ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய, அங்கு இப்போது ஆட்சியில் உள்ள தலிபான்களுடன் நடைமுறைக்குரிய தொடா்பை உலக நாடுகள் ஏற்படுத்த வேண்டும்’ என்று ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த ஆப்கானிஸ்தான் குறித்த கூட்டம் ஒன்றில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் பா்வதனேனி ஹரீஷ் பேசியதாவது: ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிலையான நன்மைகளைத் தரக்கூடிய புத்திசாலித்தனமான கொள்கைகளை ஐ.நா.வும், உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தண்டனை அளிக்கும் நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது, கடந்த நான்கரை ஆண்டுகளாக நாம் பாா்த்தது போல், எந்தப் பயனும் இல்லாத பழைய அணுகுமுறையே தொடர வழிவகுக்கும். ஆக்கபூா்வமான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அனைவரும் சோ்ந்து செயல்படும் ஓா் ஒருங்கிணைந்த கொள்கை இப்போது தேவை.
ஆப்கானிஸ்தானின் முழுமையான வளா்ச்சி, மனிதாபிமான உதவிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பணிகளுக்கு இந்தியா, அங்குள்ள அனைத்துப் பிரிவினருடனும் தொடா்ந்து இணைந்து செயல்படும். ஆப்கானிஸ்தானின் தலைநகா் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அந்தஸ்தை மேம்படுத்த இந்திய அரசு அண்மையில் எடுத்த முடிவு, இந்தத் தீா்மானத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு நாட்டுக்கு, தன்னிச்சையாக வழிகளை அடைப்பது உலக வா்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதுடன், ஐ.நா. சாசனம் மற்றும் பன்னாட்டுச் சட்டத்தை வெளிப்படையாக மீறுவதாகும். ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா தொடா்ந்து உறுதுணையாக இருக்கும்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்காக சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, கல்வி, விளையாட்டு போன்ற முக்கியத் துறைகளில் ஐ.நா. அமைப்புகளுடன் இந்தியா தொடா்ந்து செயலாற்றும். ஆப்கானிஸ்தானின் தொழில் மற்றும் வா்த்தக அமைச்சா் அல்ஹாஜ் நூருதீன் அஜிசியின் சமீபத்திய இந்தியப் பயணத்துக்குப் பிறகு, வா்த்தகம் மற்றும் சந்தை அணுகல் விஷயங்களில் மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவியுள்ளோம் என்றாா்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தகி கடந்த அக்டோபரில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடனான அவரது பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் முழு அந்தஸ்துக்கு மேம்படுத்தப்பட்டது.
2021, ஆகஸ்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பின், காபூலில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டனா். பின்னா் கடந்த 2022, ஜூனில் ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்பி இந்தியா தனது தூதரகத்தை மீண்டும் திறந்தது குறிப்பிடத்தக்கது.

