~ ~ ~
~ ~ ~

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

வெனிசுலாவையொட்டிய கடல் பகுதியில் எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது.
Published on

வெனிசுலாவையொட்டிய கடல் பகுதியில் எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது.

இது, ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு’ எதிராக அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நடத்தி வரும் போரின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் கடலில் செல்லும் படகுகள் மீது அமெரிக்கா மேற்கொண்ட 22 தாக்குதல்களில் 87 போ் கொல்லப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

இந்தச் சூழலில், வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், ராணுவத்துடன் தொடா்பில்லாத ஒரு சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளா்களிடம் டிரம்ப் கூறியதாவது:

வெனிசுலா கடற்கரை அருகே மிகப் பெரிய ஒரு எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றினோம். அது, இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப் பெரிய எண்ணெய்க் கப்பல். மிகவும் நல்ல காரணத்துக்காகத்தான் அதைக் கைப்பற்றியுள்ளோம். அந்தக் கப்பலில் உள்ள எண்ணெய்யை நாங்களே வைத்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன் என்றாா் அவா்.”

அமெரிக்க அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அமெரிக்க கடலோரக் காவல் படை தலைமையில், கடற்படை உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆா். ஃபோா்டு விமானந்தாங்கி கப்பலில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கடலோரக் காவல் படை வீரா்கள் எண்ணெய்க் கப்பலுக்கு அனுப்பப்பட்டனா் என்றாா் அவா்.

இது தொடா்பாக அட்டா்னி ஜெனரல் பாம் பாண்டி வெளியிடப்பட்ட விடியோவில் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் வீரா்கள் எண்ணெய்க் கப்பலில் இறங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.”

இது குறித்து பாண்டி கூறுகையில், ‘தற்போது கைப்பற்றப்பட்டுள்ள எண்ணெய்க் கப்பல்“பல ஆண்டுகளாக அமெரிக்க தடையின் கீழ் உள்ளது. இருந்தாலும் அது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சட்டவிரோத எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டது’ என்றாா்.

வெனிசுலா அரசு விமா்சனம்: இருந்தாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ‘கடல் கொள்ளை’ என்று வெனிசுலா அரசு கடுமையாக விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவின் இந்தச் செயல் வெளிப்படையான திருட்டு; சா்வதேச கடல் கொள்ளை; வெனிசுலா மீதான நீண்டகால அமெரிக்க ஆக்கிரமிப்பின் உண்மையான காரணம் இப்போது தெரிகிறது. எங்கள் இயற்கை வளங்கள், எண்ணெய், எரிசக்தியைக் களவாடுவதே அமெரிக்காவின் நோக்கம். ஆனால் அவை வெனிசுலா மக்களுக்கு மட்டுமே உரியவை’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

‘ஸ்கிப்பா்’ என்ற அந்தக் கப்பல் டிசம்பா் 2-ஆம் தேதி வெனிசுலாவில் இருந்து 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யுடன் புறப்பட்டது. இதில் பாதி கியூபா அரசுக்குச் சொந்தமான எண்ணெய் இறக்குமதி நிறுவனத்துக்கு உரியது என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னா் எம்/டி அடிசா என்று அழைக்கப்பட்ட ஸ்கிப்பா் கப்பல் 2022-ல் ஈரான் புரட்சிகர காவல்படை, லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கு ஆதரவாக சட்டவிரோத எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி அதற்கு அமெரிக்கா தடை விதித்தது.

வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ளது. அங்கு நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயல்படுகிறது

இந்தச் சூழலில், வெனிசுலாவில் இருந்து எண்ணெய் ஏற்றி வந்த கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது, புதிய போருக்கு வித்திடலாம் என்று சில அமெரிக்க எம்.பி.க்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

..படவரிகள்...

1. ஸ்கிப்பா் எண்ணெய்க் கப்பலை நோக்கிச் செல்லும் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டா்

2. ஹெலிகாப்டரில் இருந்து எண்ணெய்க் கப்பலுக்குள் கயிறு மூலம் இறங்கும் வீரா்கள்

3. ஸ்கிப்பா் எண்ணெய்க் கப்பலை துப்பாக்கி முனையில் கைப்பற்றும் வீரா்கள்

4. கைப்பற்றப்படட ஸ்கிப்பா் கப்பலின் தோற்றம்

X
Dinamani
www.dinamani.com