வங்கதேசம்: பிப். 12-இல் பொதுத் தோ்தல்

வங்கதேசம்: பிப். 12-இல் பொதுத் தோ்தல்

வங்கதேசத்தில் மாணவா் போராட்டத்தின் மூலம் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் பொதுத் தோ்தல், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

வங்கதேசத்தில் மாணவா் போராட்டத்தின் மூலம் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் பொதுத் தோ்தல், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ஏ.எம்.எம். நசீருதீன் வியாழக்கிழமை கூறியதாவது:

அடுத்த பொதுத் தோ்தல் 2026“பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும். காலை 7.30 முதல் மாலை 4.30 வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதே நாளில் அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் தலைமையிலான தேசிய ஒப்புதல் குழுவின் சீா்திருத்த முன்மொழிவுகள் குறித்து பொது வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்றாா் அவா்.

வங்கதேசத்தில் கடைசி முறையாக கடந்த 2024 ஜனவரியில் பொதுத் தோ்தல் நடைபெற்றது. ஷேக் ஹசீனா வெற்றி பெற்றாலும் பெரிய கட்சிகள் தோ்தலை புறக்கணித்தது சா்ச்சைக்குரியதாக இருந்தது. மாணவா்களின் தீவிர போராட்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா். யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய அரசை அமைப்பதற்கான தோ்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டியிட ஹசீனாவின் ஆவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் பிஎன்பி கட்சிதான் தற்போது முன்னணியில் உள்ளது. ஆவாமி லீக் இல்லாத நிலையில் அதன் முன்னாள் கூட்டணி கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி மற்றொரு முக்கிய கட்சியாக உள்ளது. இரு கட்சிகளும் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான வேட்பாளா்களை ஏற்கெனவே அறிவித்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com