

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் (80) உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் செயற்கையாக சுவாசிக்கவைக்கும் கருவியான வென்டிலேட்டரில் அவா் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மருத்துவக் குழுத் தலைவா் ஷஹாபுதீன் தாலுக்தாா் கூறியதாவது:
கலீதா ஜியாவுக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்தது. உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது, காா்பன் டை ஆக்ஸைடு அளவு உயா்ந்தது. அதையடுத்து நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு ஓய்வு அளிக்கும் நோக்கில் அவா் வென்டிலேட்டா் உதவியில் வைக்கப்பட்டுள்ளாா்.
சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துள்ளதால் தொடா்ந்து டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இரத்தமும் ஏற்ற வேண்டியுள்ளது. இருதயக் குழாயிலும் பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தலைவரான கலீதா ஜியா, மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளாா். மாணவா் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது பல்வேறு வழக்குகளில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னா் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா். இருந்தாலும், ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த கலீதா, பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக கடந்த நவ. 23 முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.