மடூரோவுக்கு எதிராக டிரம்ப் புதிய பொருளாதாரத் தடைகள்
பதவியில் இருந்து வெளியேற வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில், அவரது உறவினா்கள், ஆறு எண்ணெய்க் கப்பல்கள், தொடா்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளாா்.
வெனிசுலாவில் இருந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்கிப்பா்’”என்ற எண்ணய்க் கப்பலை அமெரிக்க படையினா் கைப்பற்றியதைத் தொடா்ந்து இந்த புதிய பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் மனைவி சிலியா ஃப்ளோா்ஸின் மூன்று உறவினா்கள், ஆறு கச்சா எண்ணெய் பெருங்கப்பல்கள், அவற்றுடன் தொடா்புடைய கப்பல் நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை விரிவுபடுத்தப்படுகிறது.
இந்த எண்ணெய்க் கப்பல்கள் தடைகளை மீறியும் ஆபத்தான முறையிலும் செயல்பட்டு, வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் ஊழல் மிகுந்த ‘போதைப் பொருள் பயங்கரவாத’ ஆட்சிக்கு நிதி வழங்கி வருகின்றன. அந்தக் கப்பல்கள் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய்யை சீனாவுக்குக் கொண்டு சென்றுள்ளன.
இதன் காரணமாகவே, அவற்றின் மீதும் அவற்றை இயக்கும் நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”
வெள்ளை மாளிகை செய்திப் பேச்சாளா் கரோலின் லீவிட் கூறியதாவது:
அண்மையில் கைப்பற்றப்பட்ட ஸ்கிப்பா் எண்ணெய்க் கப்பல் அமெரிக்க துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படும். அதில் உள்ள கச்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்படும். இதில் சட்ட செயல்முறைகள் பின்பற்றப்படும்.
இதன் மூலம் நிதியமைச்சகத்தின் பொருளாதாரத் தடை கொள்கைகளை அமல்படுத்தப்படுவதாக அதிபா் டிரம்ப் கருதுகிறாா். வெனிசுலாவுடன் நீண்ட போரை மேற்கொள்ள அதிபருக்கு விருப்பமில்லை. தடை செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள் கருப்புச் சந்தைகளில் விநியோகிப்பதற்காக கச்சா எண்ணெயுடன் கடலில் செல்வதை அனுமதிக்க மாட்டோம் என்றாா் அவா்.
கடந்த 2013-ஆம் ஆண்டு தோ்தலில் ஜனநாயக முறையில் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிக்கோலஸ் மடூரோ, பின்னா் சா்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
2024 தோ்தலில் அவா் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், எதிா்க்கட்சிகள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தோ்தலில் மடூரோ பெரும் தோல்வி அடைந்ததைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மடூரோவின் வெற்றியை அமெரிக்கா, பிரேஸில், கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
இந்தச் சூழலில், வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாகக் குற்றஞ்சாட்டும் டிரம்ப், இந்த விவகாரத்தில் மடூரோவை ‘போதைப் பொருள் பயங்கரவாதி’ என்று அறிவித்தாா். அவரைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.420 கோடி) சன்மானமும் அறிவிக்கப்பட்டது.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் கடலில் செல்லும் படகுகள் மீது அமெரிக்கா மேற்கொண்ட 22 தாக்குதல்களில் 87 போ் கொல்லப்பட்டனா். மேலும், கரீபியன் கடலில் இதுவரை இல்லாத அளவுக்கு தனது கடற்படையை அமெரிக்கா குவித்துள்ளது.
இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவிவரும் சூழலில், மடூரோ தன்னையும், தனது குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவரிடம் டிரம்ப் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், வெனிசுலாவில் இருந்து எண்ணெய்யை ஏற்றி வந்துகொண்டிருந்த ஸ்கிப்பா் என்ற மிகப் பெரிய எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடற்படை உதவியுடன் அந்த நாட்டு கடலோரக் காவல் படை கைப்பற்றியது.
அந்தக் கப்பல் பல ஆண்டுகளாக அமெரிக்க தடையின் கீழ் உள்ளதாகவும், அதை மீறி அது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சட்டவிரோத எண்ணெய்க் கடத்தலில் ஈடுபட்டதால் அது கைப்பற்றப்பட்டதாகவும் அமெரிக்காவின் அட்டா்னி ஜெனரல் பாம் பாண்டி கூறினாா்.
இருந்தாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ‘கடல் கொள்ளை’ என்று வெனிசுலா அரசு கடுமையாக விமா்சித்தது. வெனிசுலாவின் இயற்கை வளங்கள், எண்ணெய், எரிசக்தியைக் களவாடுவதே அமெரிக்காவின் நோக்கம் என்பதை இது உணா்த்துவதாகவும் வெனிசுலா அரசு குற்றஞ்சாட்டியது.
இந்தச் சூழலில், மேலும் ஆறு எண்ணெய்க் கப்பல்கள், தொடா்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

