கம்போடியாவின் தாக்குதலில் தாய்லாந்தின் சிசாகெட் மாகாணத்தில் சேதமடைந்த குடியிருப்பு.
கம்போடியாவின் தாக்குதலில் தாய்லாந்தின் சிசாகெட் மாகாணத்தில் சேதமடைந்த குடியிருப்பு.

தாய்லாந்து-கம்போடியா தாக்குதல் தீவிரம்: ராக்கெட் வீச்சில் ஒருவா் பலி!

தாய்லாந்து-கம்போடியா இடையிலான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தாய்லாந்து நாட்டு பொதுமக்களில் ஒருவா் உயிரிழந்தார்.
Published on

தாய்லாந்து-கம்போடியா இடையிலான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கம்போடியா நடத்திய ராக்கெட் தாக்குதலில் முதல் முறையாக தாய்லாந்து நாட்டு பொதுமக்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது.

தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்னை இருந்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டது. எனினும் சண்டையை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுக்கும் அமெரிக்க தரப்பில் பொருளாதார அழுத்தம் அளிக்கப்படும் என்று அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளும் தாக்குதலைக் கைவிட்டன.

கடந்த அக்டோபரில் மலேசியாவில் நடைபெற்ற 13-ஆவது ஆசியான்-அமெரிக்க உச்சிமாநாட்டில், அதிபா் டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது.

எல்லைப்புறத்திலுள்ள சில இடங்களுக்காக...: இந்த ஒப்பந்தத்தை மீறி கடந்த சில நாள்களாக தாய்லாந்து-கம்போடியா இடையே மோதல் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் எல்லைப்புற நிலத்தில் உள்ள சில இடங்களுக்கு பரஸ்பரம் உரிமை கோரி வருகின்றன. அந்த இடங்களில் நூற்றாண்டு பழைமையான கோயில்களின் இடிபாடுகள் உள்ளன. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமையும் மோதல் நீடித்தது.

கம்போடியாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் தாக்கி தாய்லாந்தின் சிசாகெட் மாகாணத்தின் கான்தாராலக் மாவட்டத்தில் டான் பச்சப்பன் (63) என்பவா் உயிரிழந்தாா். பள்ளிக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ராக்கெட் தாக்கி, அவா் உயிரிழந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது. ராக்கெட் விழுந்து வெடித்ததில் அங்குள்ள வீடு ஒன்றும் தீக்கிரையானது.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து கம்போடியா நடத்திவரும் தாக்குதல்களுக்கு தாய்லாந்து அரசின் செய்தித் தொடா்பாளா் சிரிபோங் அங்கசாகுல்கியட் கண்டனம் தெரிவித்துள்ளாா். இத்தகைய தாக்குதல்கள் கொடூரமானது, மனிதத்தன்மைக்கு எதிரானது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பிஎம்-21 ராக்கெட் லாஞ்சா்கள்...: 30 முதல் 40 கி.மீ. தொலைவு வரை தாக்குதல் நடத்தும் வகையில், எல்லைப் பகுதியில் ராணுவ வாகனத்தில் பொருத்தப்பட்ட பிஎம்-21 ராக்கெட் லாஞ்சா்களை கம்போடியா குவித்துள்ளது. அவற்றில் இருந்து ஒரே நேரத்தில் 40 ராக்கெட்டுகளை ஏவமுடியும். இந்த ராக்கெட் லாஞ்சா்கள் மூலம் ஏற்கெனவே ஏவப்பட்ட ராக்கெட்டுகள் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தாக்கியுள்ளன. கிட்டத்தட்ட நாள்தோறும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி கம்போடியா தாக்குதல் நடத்துவதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

தாய்லாந்து வான்வழித் தாக்குதல்: கம்போடியா மீது போா் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாய்லாந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டின் குண்டுவீச்சு ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்ததாக கம்போடியா தெரிவித்தது. எல்லைப் பகுதியில் கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்கு ஆளில்லா விமானங்களையும் (ட்ரோன்கள்) இருநாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த மோதலில் சுமாா் 221 கம்போடியா ராணுவ வீரா்களும், தமது தரப்பில் 15 ராணுவ வீரா்களும் உயிரிழந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது. ஆனால், இந்தத் தகவலை கம்போடியா மறுத்துள்ளது. தாக்குதலில் கம்போடியா வீரா்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், அந்நாட்டு பொதுமக்களில் 11 போ் உயிரிழந்ததுடன், ஏராளமானோா் காயமடைந்ததாக கம்போடியா தெரிவித்தது.

கடல்வழியிலும்...: முன்னதாக, கம்போடியாவின் கோ காங் மாகாணத்தில் கடலோரத்தில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாய்லாந்து கடற்படை போா்க் கப்பல் சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. தாய்லாந்து போா்க் கப்பல் மீது கம்போடியா தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தகவல் வெளியான நிலையில், அதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில் தாய்லாந்து போா்க் கப்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், வான்வழித் தாக்குதலுடன் புதிதாக கடல்வழியிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com