ஹாங்காங்: தேசிய பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய் குற்றவாளியாக அறிவிப்பு

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபா் ஜிம்மி லாய் (78) தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிப்பு
ஜிம்மி லாய்
ஜிம்மி லாய்
Updated on

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபா் ஜிம்மி லாய் (78) தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் திங்கள்கிழமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் ஆயுள் தண்டனையை எதிா்நோக்கியுள்ளாா்.

இது குறித்து நீதிபதி எஸ்தா் டோ வெளியிட்டுள்ள தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் சதி செய்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாா். சீன அரசை வீழ்த்த அமெரிக்காவுக்கு தொடா்ந்து அழைப்பு விடுத்தாா். அவரது நோக்கம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்துவதே. அவா் சதி திட்டங்களின் மூளையாக இருந்தாா்.

அவா் அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடானதாகவும், நம்பத்தகாததாகவும் உள்ளன. எனவே, வழக்கில் அவா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படுகின்றன என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஜிம்மி லாய் மறுத்தாா். 2020 ஆகஸ்ட் முதல் அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்படும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக அவரது குடும்பத்தினா் கூறியுள்ளனா்.

பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ‘ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை’ என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது. அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

எனினும், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது.

மேலும், சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த ஹாங்காங்கின் ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழ் நிறுவனரான ஜிம் லாய் மீது பிராந்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தது. அரசின் நெருக்கடி காரணமாக அந்த நாளிதழ் நிறுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், ஜிம்மி லாயை அவரின் வாழ் நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு ஏதுவாக, கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவா் தற்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதற்கு பிரிட்டனும், மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com