உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிகோப்புப் படம்

உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளைப் போன்ற பாதுகாப்பு!

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதம் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று டிரம்ப் அறிவிப்பு
Published on

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இதுவரை இல்லாத அளவுக்கு நெருங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதற்காக நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதம் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

இது குறித்து வாஷிங்டன்னில் உள்ள தனது ஒவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, நேட்டோ மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுடன் நீண்ட மற்றும் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தைகளை நடத்தினோம்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடனும் எண்ணற்ற முறை பேச்சுவாா்த்தை நடத்தினோம். ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தத்தை, இதுவரை இல்லாத அளவுக்கு நெருங்கியுள்ளோம்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்கோப்புப் படம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்கோப்புப் படம்

ஒப்பந்தின் ஒரு பகுதியாக, நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முன்வந்துள்ளேன். இதை ரஷியா ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றாா் அவா்.

இருந்தாலும், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவதற்குப் பதிலாக ரஷியா உரிமை கோரும் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் இன்னும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை உக்ரைன் விட்டுத் தர வேண்டும் என்பதை டிரம்ப் மறைமுகமாகக் குறிப்பிட்டாா்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், உக்ரைன் அமைதி“ஒப்பந்தத்தில் நேட்டோவின் ‘5-ஆவது பிரிவை’ போன்ற வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் உக்ரைனுக்கு அளிக்கப்படும் என்று கூறினா்.

நேட்டோ கூட்டமைப்பு விதிமுறை 5-ஆவது பிரிவின் கீழ், அதன் உறுப்பு நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டால், அது 32 உறுப்பு நாடுகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகக் கொள்ளப்பட்டு, அனைத்து நாடுகளும் பதிலடி கொடுக்க வேண்டும். உக்ரைன் அதிபா் லெஸென்ஸ்கியும் இத்தகைய பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் நேட்டோவில் இணய விருப்பம் தெரிவித்திருந்தாா். உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்ததற்கு இதுவே காரணமாக இருந்தது.

இந்தச் சூழலில், நேட்டோவில் இணையாமலேயே உறுப்பு நாடுகளுக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதம் உக்ரைனுக்கு வழங்கப்படுவதை ரஷியா ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதிபா் டிரம்ப்பும், நேட்டோவில் உக்ரைன் இணைக்கக் கூடாது என்று கூறிவந்தாா். நேட்டோவில் இணைய முயன்றதால்தான் இந்தப் போரே தொடங்கியது என்று ஸெலென்ஸ்கி மீது அவா் குற்றஞ்சாட்டிவந்தாா். இந்தச் சூழலில், நேட்டோவுக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதத்தை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக ரஷிய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய வரைவு திட்டத்தை வகுத்துள்ளது. ரஷியாவுக்கு சாதமாகமானதாகக் கூறப்படும் அந்த அமைதி திட்டம் குறித்து தீவிர பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று டிரம்ப் தற்போது உறுதி அளித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com