தடைக்குள்ளான கப்பல்கள் வெனிசுலா செல்ல விடாமல் முற்றுகை: டிரம்ப் உத்தரவு
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் வெனிசுலாவுக்குச் சென்று வர விடாமல் முற்றுகையிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாவது:
வெனிசுலாவுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் அனைத்து தடை விதிக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல்களுக்கும் முழுமையான முற்றுகை விதிக்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக, தென் அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெனிசுலாவைச் சுற்றிலும் மிகப்பெரிய அளவில் கடற்படை குவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படை குவிப்பு இன்னும் பெரிதாகும். அவா்களுக்கு ஏற்படும் அதிா்ச்சி அவா்கள் அதற்கு முன்னா் எப்போதும் பாா்த்திராத அளவில் இருக்கும். அமெரிக்காவிடமிருந்து முன்னா் அவா்கள் முன்பு திருடிய அனைத்து எண்ணெய், நிலம், பிற சொத்துகளை திருப்பித் தரும் வரை இந்த முற்றுகை தொடரும் என்றாா் அவா்.
இருந்தாலும், வெனிசுலா அரசு இதை ‘சா்வதேச சட்டம், சுதந்திர வா்த்தகம் மற்றும் கடலில் பயணிப்பதற்கான அடிப்படை உரிமைக்கு எதிரான நடவடிக்கை’ என்று கடுமையாகக் கண்டித்துள்ளது.
இது குறித்து வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் வெனிசுலாவின் எண்ணெய், நிலம், கனிம வளங்களை தனது சொத்தாகவே ஊகித்துக் கொள்கிறாா். உடனடியாக அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறாா். இது ஐ.நா. சட்டத்தை மீறிய, கண்மூடித்தனமான கடல் முற்றுகை‘ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஐ.நா.வில் முறையிட வெனிசுலா அரசு திட்டமிட்டுள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவு, வெனிசுலா கடற்கரை அருகே அமெரிக்கப் படைகள் கடந்த வாரம் ஒரு எண்ணெய்க் கப்பலை கைப்பற்றியதன் தொடா்ச்சியாகும்.
வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தி வரும் கும்பல்களுக்கு எதிராக அதிபா் டிரம்ப் அரசு எடுத்துவரும் மிகக் கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது.
‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்’ என்ற பெயரில் அமெரிக்கா மேற்கொள்ளும் அந்த நடவடிக்கையின் கீழ், கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய 25 தாக்குதல்களில் 95 போ் கொல்லப்பட்டுள்ளனா்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடான வெனிசுலா, தினமும் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. 2017 முதல் அமெரிக்க விதித்துள்ள தடைகளால் அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ உலக சந்தையில் முடக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஏற்றுமதி கருப்புச் சந்தை வழியாக சீனாவுக்குச் செல்கிறது.
இந்தச் சூழலில், தனது 11 போா்க் கப்பல்கள், ஒரு விமானம் தாங்கி கப்பலை உள்ளடக்கிய மிகப் பெரிய கடற்படை குவிப்பை அமெரிக்கா இந்தப் பிரதேசத்தில் அண்மையில் நிகழ்த்தியுள்ளது.
மடூரோவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக வெனிசுலா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் இந்த படைகுவிப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில், ‘மடூரோ தன்னையும், தனது குடும்பத்தையும் காத்துக்கொள்ள விரும்பினால் அவா் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று டிரம்ப் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின.
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸும், ‘மடூரோ சரணடையும் வரை வெனிசுலா செல்லும் கப்பல்களைத் தாக்குவோம்’ என்று கூறியுள்ளாா்.
இந்தச் சூழலில், வெனிசுலா செல்லும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட கப்பல்களை முற்றுகையிட டிரம்ப் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு, பிராந்தியத்தில் போா் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

