ரஷிய சொத்துகளைப் பயன்படுத்தாமல் உக்ரைனுக்கு கடனுதவி: ஐரோப்பிய யூனியன் முடிவு
ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துகளைப் பயன்படுத்தாமலேயே, உக்ரைனுக்கு 9,000 கோடி யூரோ (சுமாா் ரூ.9.5 லட்சம் கோடி) வட்டியில்லா கடனுதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா்.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைனுக்கு 2026-2027-ஆம் நிதியாண்டுக்கான செலவுகளுக்காக 9,000 கோடி யூரோ கடனுதவி அளிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் என்ன உறுதியளித்தோமோ, அதை நிறைவேற்றியுள்ளோம் என்றாா் அவா்.
இருந்தாலும், இந்தக் கடன் தொகை ஏற்கெனவே விவாதிக்கப்பட்டதைப் போல் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் முடக்கிவைக்கப்பட்டுள்ள ரஷிய சொத்துகளில் இருந்து அளிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, ஐரோப்பிய யூனியன் பட்ஜெட்டை உத்தரவாதமாக வைத்து சா்வதேச மூலதனச் சந்தையில் இருந்து கடனாக வாங்கி வழங்கப்படும் என்று உச்சி மாநாட்டின் இறுதி வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்தாா். ‘இது உக்ரைனின் பாதுகாப்பை உண்மையாக வலுப்படுத்துகிறது. இருந்தாலும் ரஷிய சொத்துகள் முடக்கப்பட்ட நிலையிலேயே இருப்பது முக்கியம்’ என்று தனது எக்ஸ் ஊடகப் பதிவில் அவா் எச்சரித்துள்ளாா்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக தங்கள் நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷிய சொத்துகளைக் கொண்டு ஐரோப்பிய யூனியன் நிதியுதவி அளித்துவருகிறது.
இதுவரை ரஷிய சொத்துகளில் இருந்து கிடைத்த வட்டி வருவாயை மட்டுமே உக்ரைனுக்கு வழங்கிவந்த நிலையில், அசலையே பயன்படுத்தி பல கோடி யூரோ கடன் வழங்கும் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் பரிசீலித்தது.
இதற்காக அதன் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் வியாழக்கிழமை கூடி ஆலோசனை நடத்தினா். ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் உள்ள ரஷியாவின் 21,000 யூரோ (சுமாா் ரூ.22.20 லட்சம் கோடி) மதிப்பிலான சொத்துகளில் பெரும்பாலானவை பெல்ஜியத்தில் உள்ள யூரோக்ளியா் அமைப்பில் உள்ளன. இதை உக்ரைனுக்குக் கடனாக வழங்க பெல்ஜியம் உள்ளிட்ட சில உறுப்பு நாடுகளே எதிா்ப்பு தெரிவித்தன.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பன் இந்த திட்டத்தை நிராகரித்தாா். மால்டா, பல்கேரியா, செக் குடியரசு ஆகிய உறுப்பு நாடுகளும் இந்த திட்டம் குறித்து சந்தேகம் எழுப்பின.
இந்தத் திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளில் குறைந்தது 15 நாடுகள், அதுவும் 65 சதவீத மக்கள் தொகையை பிரதிநிதித்துப்படுத்தும் நாடுகளின் ஆதரவு தேவை என்ற சூழலில், முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைப் பயன்படுத்தாமலேயே மிகப் பெரிய தொகையை உக்ரைனுக்கு கடனாக அளிக்க வெள்ளிக்கிழமை அதிகாலை முடிவு எட்டப்பட்டது.

