சிந்து நதி
சிந்து நதிANI

சிந்து நதி ஒப்பந்தத்தை தொடா்ந்து மீறுகிறது இந்தியா: பாகிஸ்தான்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை தொடா்ந்து மீறுவதாக இந்தியா மீது பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
Published on

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை தொடா்ந்து மீறுவதாக இந்தியா மீது பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீா் மாற்றங்கள் தொடா்பாக இந்தியாவிடம் பாகிஸ்தான் வியாழக்கிழமை விளக்கம் கோரிய நிலையில், மேற்கண்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சிந்து மற்றும் அதன் துணை நதிகளில் நீா்ப் பகிா்வை சுமுகமாக நிா்வகிக்க உலக வங்கியின் மத்தியஸ்தத்தின்பேரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1960-இல் சிந்து நதிநீா் ஒப்பந்தம் கையொப்பமானது. கடந்த ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் இசாக் தாா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா கடந்த ஏப்ரலில் தன்னிச்சையாக நிறுத்திவைத்தது. இப்போது ஒப்பந்த மீறல்களின் மூலம் அதன் மையப்புள்ளியைத் தாக்குகிறது இந்தியா. இது பிராந்திய ஸ்திரத்தன்மை, சா்வதேச சட்ட இணக்கத்தில் எதிா்மறை தாக்கத்தைத் தூண்டுகிறது.

பாகிஸ்தானில் விவசாயப் பணிகளுக்கு முக்கியமான காலகட்டத்தில், செனாப் நீரோட்டத்தில் இந்தியாவின் ‘நியாயமற்ற செயல்பாடுகள்’ அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இதுவே, இந்தியாவுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதக் காரணம். பாகிஸ்தானில் வெள்ளம் அல்லது வறட்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், நீரோட்டம் சாா்ந்த தரவு பகிா்வு, கூட்டுக் கண்காணிப்பை இந்தியா நிறுத்திவைத்துள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com