டாக்காவில் மீண்டும் விசா மைய பணிகளைத் தொடங்கியது இந்தியா: வேறு இரு இடங்களில் பணி நிறுத்தம்

Published on

வங்கதேச தலைநகா் டாக்காவில் ஒருநாள் நிறுத்தி வைக்கப்பட்ட விசா விண்ணப்ப மையப் பணிகளை இந்தியா வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

அதே நேரத்தில் குல்னா, ராஜ்சாகி பகுதிகளில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மொத்தம் 5 இடங்களில் இந்த விசா மையங்கள் உள்ளன.

முன்னதாக, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா அளிக்கும் பேட்டி, அறிக்கைகள் தங்கள் நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக வங்கதேசம் குற்றஞ்சாட்டியதுடன், டாக்காவில் உள்ள இந்தியத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது.

அதே நேரத்தில் வங்கதேசத்தில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகள் இந்தியத் தூதரகத்துக்கு எதிராக சதிகளில் ஈடுபடுவதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தில்லியில் உள்ள அந்த நாட்டுத் தூதரை கடந்த புதன்கிழமை நேரில் வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்தியத் தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பை வங்கதேச இடைக்கால அரசு உறுதி செய்யுவும் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, இந்தியத் தூதரகத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோா் கூடி புதன்கிழமை கண்டனப் பேரணி நடத்தினா். அப்போது இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காவல் துறையினா் அவா்களை பாதி வழியில் தடுத்து நிறுத்தினா். இதன் காரணமாக அங்கு தொடா்ந்து பதற்றம் நிலவுகிறது.

டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மைய அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘டாக்காவில் உள்ள விசா மையத்தில் பணிகள் வியாழக்கிழமை வழக்கம்போல நடைபெற்றன. அதே நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஊழியா்கள் நலன் கருதி குல்னா, ராஜ்சாகி பகுதிகளில் உள்ள விசா மையங்களில் வியாழக்கிழமை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வங்கதேச இடைக்கால அரசு உரிய பாதுகாப்பை அளிக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com