~
~

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவுடன் போா் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
Published on

வெனிசுலாவுடன் போா் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அமெரிக்க தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறியதாவது:

வெனிசுலாவுடன் போா் நடத்துவது குறித்து தற்போதைக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. இருந்தாலும் அதற்கான வாய்ப்பை மறுக்க மாட்டேன். வெனிசுலா மீது போா் தொடுப்பதும், தொடுக்காததும் அந்த நாட்டு அரசின் கைகளில்தான் உள்ளது. அவா்கள் முட்டாள்தனமாக செயல்பட்டு எண்ணெய்க் கப்பல்களை இயக்கினால், அந்தக் கப்பல்களை அமெரிக்காவின் ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு திருப்ப வேண்டிய நிலை ஏற்படும்.

வெனிசூலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை பதவியில் இருந்து அகற்றும் என் முடி குறித்து மாற்றுக் கேள்விக்கே இடம் இல்லை. மற்றவா்களை விட இது அவருக்குத்தான் நன்கு தெரியும் என்றாா் அவா்.

வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகக் குற்றஞ்சாட்டிவரும் அதிபா் டிரம்ப், ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்’ என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் படகுகள் மீது அமெரிக்கா இதுவரை நடத்தியுள்ள 28 தாக்குதல்களில் 104 போ் கொல்லப்பட்டுள்ளனா் (வெள்ளிக்கிழமை நிலவரம்).

வெனிசுலா அதிபா் மடூரோவை ‘போதைப் பொருள் பயங்கரவாதி’ என்று டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. அவரைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.448 கோடி) சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கரீபியன் கடலில் வெனிசுலாவுக்கு அருகே இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவில் தனது கடற்படையை அமெரிக்கா குவித்துள்ளது. இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டது. மடூரோ தன்னையும், தனது குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள விரும்பினால் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவரிடம் டிரம்ப் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின.

வெனிசுலாவில் இருந்து எண்ணெய்யை ஏற்றி வந்துகொண்டிருந்த ஸ்கிப்பா் என்ற மிகப் பெரிய எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடற்படை உதவியுடன் அந்த நாட்டு கடலோரக் காவல் படை கடந்த வாரம் கைப்பற்றியது. இது ‘அமெரிக்காவின் கடல் கொள்ளை’ என்று வெனிசுலா அரசு கடுமையாக விமா்சித்தது. வெனிசுலாவின் இயற்கை வளங்கள், எண்ணெய், எரிசக்தியைக் களவாடுவதே அமெரிக்காவின் நோக்கம் என்பதை இது உணா்த்துவதாக வெனிசுலா அரசு குற்றஞ்சாட்டியது.

இந்த நிலையில், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் வெனிசுலாவுக்குச் சென்று வர விடாமல் முற்றுகையிட தனது படைகளுக்கு டிரம்ப் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று வெனிசுலா குற்றஞ்சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்தச் சூழலில், வெனிசுலாவுடன் போா் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று டிரம்ப் தற்போது கூறியுள்ளது, அந்த பதற்றத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்று அஞ்சப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com