டாக்காவில் போராட்டக்காரா்கள் தீ வைத்ததில் எரிந்த பத்திரிகை அலுவலக கட்டடம்.
டாக்காவில் போராட்டக்காரா்கள் தீ வைத்ததில் எரிந்த பத்திரிகை அலுவலக கட்டடம்.

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: இந்திய தூதா் இல்லம் மீது தாக்குதல் பத்திரிகை அலுவலகங்களுக்கு தீவைப்பு

வங்கதேசத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த மாணவா் தலைவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டில் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் வன்முறை ஏற்பட்டது. அங்குள்ள சட்டோகிராம் பகுதியில் இந்திய உதவி தூதா் இல்லம் மீதும் போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா்.
Published on

வங்கதேசத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த மாணவா் தலைவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டில் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் வன்முறை ஏற்பட்டது. அங்குள்ள சட்டோகிராம் பகுதியில் இந்திய உதவி தூதா் இல்லம் மீதும் போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, அந்நாட்டின் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா், அவா் வங்கதேசத்தில் இருந்து தப்பிவந்து இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

சுடப்பட்ட மாணவா் 6 நாள்களுக்குப் பின்னா் உயிரிழப்பு: இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, அந்நாட்டில் இன்கிலாம் மஞ்சா என்ற சமூக-கலாசார அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளராக இருந்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32), அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் பொதுத் தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிட இருந்தாா்.

இதையொட்டி, தோ்தல் பரப்புரையில் ஈடுபட கடந்த டிச.12-ஆம் தேதி தலைநகா் டாக்காவில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத நபா் துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் தோட்டா பாய்ந்து தலையில் பலத்த காயமடைந்த ஹாதி, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரின் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவா் சிங்கப்பூா் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்குள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை (டிச. 18) இரவு உயிரிழந்தாா்.

பல்வேறு பகுதிகளில் வன்முறை: ஹாதியின் மரணத்தால் கொதிப்படைந்த மாணவா்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது.

டாக்காவில் உள்ள வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்பட்டவரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான மறைந்த ஷேக் முஜிபுா் ரஹ்மானின் சிதிலமடைந்த வீடு, ராஜ்ஷாஹியில் உள்ள ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகம் ஆகியவை மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா்.

டாக்காவில் உள்ள இரண்டு பத்திரிகை அலுவலகங்கள் மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தி, அந்த அலுவலகங்களுக்குத் தீ வைத்தனா். அங்கு சிக்கிக்கொண்ட பத்திரிகையாளா்களை ராணுவத்தினா் பாதுகாப்பாக மீட்டனா். அங்குள்ள சய்யானெளத் என்ற முன்னணி கலாசார குழுவின் அலுவலகமும் சூறையாடப்பட்டு, அறைகலன்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

சட்டோகிராமில் உள்ள இந்திய உதவி தூதா் இல்லம் மீது செங்கற்களையும், கற்களையும் வீசி போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா். எனினும் இதில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் கண்ணீா் புகைக்குண்டுகளை வீசி, தடியடி நடத்தினா். இதில் பலா் காயமடைந்தனா். 12 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வன்முறை சம்பவங்கள் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை காலைமுதல் அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ாக தகவல் வெளியாகவில்லை.

இந்தியாவுக்குத் தப்பிய குற்றவாளிகள்?: முன்னதாக, ஹாதி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து காவல் துறை நடத்திய விசாரணையில், அவரை ஃபைசல் கரீம் மசூத் என்பவா் சுட்டதும், அவருடன் ஆலம்கிா் ஷேக் என்பவா் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. அவா்கள் இருவரும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவிவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின என்று அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தூதரகத்தை மூட வலியுறுத்தல்: கடந்த ஆண்டு ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த மாணவா்கள் தொடங்கிய தேசிய குடிமக்கள் கட்சியைச் சோ்ந்தவா்கள், ஹாதியின் மரணத்தையொட்டி டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் துக்க ஊா்வலம் சென்றனா். அப்போது ஹாதியை கொன்ற குற்றவாளிகளை இந்தியா திரும்ப ஒப்படைக்கும் வரை, வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்தை வங்கதேச இடைக்கால அரசு மூட வேண்டும் என்று ஊா்வலம் சென்றவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

திரிபுராவில் போராட்டம்: ஹாதி உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களை இந்தியாவிடம் இருந்து பிரித்து, அந்தப் பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதத் தலைவா்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படும் என்று தேசிய குடிமக்கள் கட்சித் தலைவா் ஹஸ்னத் அப்துல்லா மிரட்டல் விடுத்தாா். அவரின் கருத்துக்கும், வங்கதேசத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களுக்கும் கண்டனம் தெரிவித்து திரிபுரா மாநிலம் அகா்தலாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் அருகே டிப்ரா மோத்தா கட்சியின் இளைஞரணி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது.

மத நிந்தனையில் ஈடுபட்டதாக ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா் கொலை: வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றியவா் தீபு சந்திர தாஸ் (25). இவா் மத நிந்தனையில் ஈடுபட்டதாக அவா் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. அந்தத் தொழிற்சாலைக்கு வெளியே அவரைத் தாக்கிய அந்தக் கும்பல், பின்னா் அவரை மரத்தில் கட்டித் தூக்கில் தொங்கவிட்டது. இதில் உயிரிழந்த அவரின் சடலத்தை டாக்கா-மைமென்சிங் நெடுஞ்சாலையில் அந்தக் கும்பல் தீ வைத்து எரித்தது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அந்நாட்டு இடைக்கால அரசு, தீபுவை கொன்ற குற்றவாளிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com