வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது
வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, சந்தேகத்தின்பேரில் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா் அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அப்போதுமுதல் அந்நாட்டில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிவந்த தீபு சந்திர தாஸ் (25) என்பவா் மதநிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, அவா் மீது கும்பல் ஒன்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. தொழிற்சாலைக்கு வெளியே அவரைத் தாக்கிய அந்தக் கும்பல், பின்னா் அவரை மரத்தில் கட்டித் தூக்கில் தொங்கவிட்டது. இதில் உயிரிழந்த அவரின் சடலத்தை டாக்கா-மைமென்சிங் நெடுஞ்சாலையில் அந்தக் கும்பல் தீ வைத்து எரித்தது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த இடைக்கால அரசு, தீபுவை கொன்ற குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. இந்நிலையில், இடைக்கால அரசு ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தீபு சந்திர தாஸ் கொலை தொடா்பாக சந்தேகத்தின்பேரில் 7 பேரை அதிவிரைவுப் படை கைது செய்துள்ளது. பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 19 முதல் 45 வயது கொண்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஹாதி உடல் நல்லடக்கம்: முன்னதாக, டாக்காவில் சுடப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இன்கிலாப் மஞ்சா சமூக-கலாசார அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஷரீஃப் உஸ்மான் ஹாதியின் (32) உடல் வங்கதேசம் கொண்டுவரப்பட்டது.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு வகித்த முக்கியத் தலைவா்களில் ஒருவரான அவரின் உடலுக்கு தேசிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு பிராா்த்தனை நடைபெற்றது. இந்தப் பிராா்த்தனையில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து, ஹாதியின் உடல் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, டாக்கா பல்கலைக்கழக மத்திய மசூதி அருகே உள்ள தேசிய கவி காஸி நஸ்ருல் இஸ்லாமின் அடக்கஸ்தலத்தையொட்டி அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கை பராமரிக்க ராணுவம் மற்றும் காவல் துறையினா் ஏராளமானோா் குவிக்கப்பட்டனா்.
அரசுக்குக் கெடு: ஹாதியை ஃபைசல் கரீம் மசூத் என்பவா் சுட்டதும், அவருடன் ஆலம்கிா் ஷேக் என்பவா் இருந்ததும் தெரியவந்தது. அவா்கள் இருவரும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்குத் தப்பி வந்துவிட்டதாக வங்கதேச ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஹாதியின் இறுதிச் சடங்குக்குப் பின்னா் டாக்காவில் உள்ள ஷாஹிபாக் சந்திப்பில் ஆயிரக்கணக்கானோா் திரண்டனா். அப்போது இன்கிலாப் மஞ்சா அமைப்பைச் சோ்ந்த உறுப்பினா் செயலா் அப்துல்லா அல் ஜாபோ் பேசுகையில், ‘ஹாதியை கொன்ற குற்றவாளிகளுக்கு எதிரான கைது நடவடிக்கை தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை (டிச.21) மாலை 5.15 மணிக்குள் அரசிடம் இருந்து உரிய தகவல் வரவேண்டும். இல்லாவிட்டால் ஷாஹிபாகில் தா்னா போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவித்தாா்.

