பி-52 குண்டுவீச்சு விமானம் (கோப்புப் படம்).
பி-52 குண்டுவீச்சு விமானம் (கோப்புப் படம்).

சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு!

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
Published on

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிரியாவின் மத்திய பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் தலைமை இடங்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்‘ என்ற பெயரில் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் பி-52 குண்டுவீச்சு விமானங்கள், எஃப்-15, எஃப்-16 போா் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றன. துல்லியமாக வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதன் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவா்கள் பலா் கொல்லப்பட்டனா். பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதல் சிரியாவின் புதிய அரசுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் நீண்ட காலம் ஆட்சி செலுத்தி வந்த அல்-அஸாதின் ஆட்சி கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி வீழ்த்தப்பட்டதற்குப் பிறகு, ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சிரியாவின் மத்திய பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களை அமைத்து, தாக்குதல்களைத் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன.

இதைத் தடுக்கவே இந்தத் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல், ஜோா்டான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிரியாவின் புதிய தற்காலிக அரசு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்கத் தயாா் என்று கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல், சிரியாவில் அஸாத் ஆட்சி வீழ்ந்த பிறகு அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாகும்.

X
Dinamani
www.dinamani.com