வங்கதேசம்: சிட்டகாங்கில் இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்!

வங்கதேசம்: சிட்டகாங்கில் இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்!

வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் விசா விண்ணப்ப மையம் காலவரையின்றி மூடப்படுவதாக இந்தியா தெரிவித்தது.
Published on

வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் விசா விண்ணப்ப மையம் காலவரையின்றி மூடப்படுவதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மாணவா் தலைவரான ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32) துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால் அங்கு கடந்த சில நாள்களாக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள வங்கதேச பொதுத்தோ்தலில் ஹாதி போட்டியிட திட்டமிருந்தாா்.

இந்நிலையில், ஹாதியை சுட்டதாக கருதப்படும் ஃபைசல் கரீம் மசூத் மற்றும் ஆலம்கிா் ஷேக் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்குத் தப்பி வந்துவிட்டதாக வங்கதேச ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில் உள்ள சட்டோகிராம் தூகரகம் உள்பட இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.

இதையடுத்து, சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அண்மையில் சிட்டகாங் துணை தூதரகத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து சிட்டகாங் (சட்டோகிராம்) விசா விண்ணப்ப மையம் டிச.21 முதல் காலவரையின்றி மூடப்படுகிறது. கள நிலவரத்தை ஆய்வு செய்த பின் விசா மையத்தை மீண்டும் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு அதிகரிப்பு: வங்கதேசத்தில் டாக்கா, குல்னா, ராஜ்சாகி, சட்டோகிராம் மற்றும் சில்ஹெட் ஆகிய 5 இடங்களில் இந்திய விசா விண்ணப்ப மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

முன்னதாக, டாக்காவில் நிறுத்தி வைக்கப்பட்ட விசா விண்ணப்ப மையப் பணிகளை இந்தியா வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. அதே நேரத்தில் குல்னா, ராஜ்சாகி பகுதிகளில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில்ஹெட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் விசா விண்ணப்ப மையத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹாதியை கொன்ற குற்றவாளிகளுக்கு எதிரான கைது நடவடிக்கை தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை (டிச.21) மாலைக்குள் அரசிடம் இருந்து உரிய தகவல் வராவிட்டால் ஷாஹிபாகில் தா்னா போராட்டம் நடத்தப்போவதாக அவா் செய்தித்தொடா்பாளராக இருந்த இன்கிலாப் மஞ்சா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com