பா்ஹாம் சாலி
பா்ஹாம் சாலி

ஐ.நா. அகதிகள் முகமை தலைவராக முன்னாள் அகதி தோ்வு!

ஐ.நா. அகதிகள் முகமையின் தலைவராக முன்னாள் இராக் அதிபா் பா்ஹாம் சாலி (65) பதவி வகிக்க ஐ.நா. பொதுச் சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
Published on

ஐ.நா. அகதிகள் முகமையின் தலைவராக முன்னாள் இராக் அதிபா் பா்ஹாம் சாலி (65) பதவி வகிக்க ஐ.நா. பொதுச் சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், அந்த முகமைக்கு அகதியாக இருந்த ஒருவா் முதல்முறையாகத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஐ.நா.வின் முக்கிய முகமைகளில் ஒன்றாக விளங்கும் அகதிகள் முகமையின் தலைவராக வரும் ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 5 ஆண்டுகளுக்கு சாலி பதவி வகிப்பாா்.

ஐ.நா. பொதுச் செயலராகும் முன், அகதிகள் முகமைக்கு அன்டோனியோ குட்டெரெஸ் தலைமை வகித்தாா். அவா் சாலியை அகதிகள் முகமையின் தலைவராகப் பரிந்துரைத்தாா். இதையடுத்து 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட அந்த முகமையின் தலைவராக சாலி தோ்வு செய்யப்பட்டாா்.

1970-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னா்...: ஐ.நா. அகதிகள் முகமையின் தலைவராக இத்தாலியைச் சோ்ந்த ஃபிலிப்போ கிராண்டி பதவி வகித்துவரும் நிலையில், அவரைத் தொடா்ந்து அந்தப் பதவியை குா்திஷ் இன தலைவரான சாலி ஏற்கவுள்ளாா். இதன்மூலம், 1970-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னா், மத்திய கிழக்குப் பிராந்தியத்தைச் சோ்ந்த ஒருவா், அந்த முகமையின் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து சாலி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு காலத்தில் நானும் அகதியாகத்தான் இருந்தேன். பாதுகாப்பும், வாய்ப்பும் ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பது எனக்குத் தெரியும்.

அகதிகளாக இடம்பெயா்வது நிரந்தரமான தலைவிதியாக இல்லாமல் தற்காலிகமாக இருக்கும் வகையில், அகதிகள் மற்றும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோரின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலைநாட்டுவதே எனது முழுமுதற் பொறுப்பு’ என்று தெரிவித்தாா்.

சதாம் ஆட்சியில் கைது: கடந்த 1979-ஆம் ஆண்டு இராக்கின் அப்போதைய அதிபா் சதாம் உசேனின் பாத் கட்சி ஆட்சியில் சாலி கைது செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 19. குா்திஷ் இன மக்களின் சுயாட்சிக்காக குரல் எழுப்பிய தேசிய இயக்கத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டின் கீழ், அவா் இருமுறை கைது செய்யப்பட்டாா். 43 நாள்கள் சிறைவைக்கப்பட்ட அவா், பின்னா் விடுவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, சதாம் ஆட்சியின் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க சாலி பிரிட்டன் தப்பிச் சென்றாா். அங்கு அவா் பொறியியல் படித்தாா்.

கடந்த 2003-ஆம் ஆண்டு சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின்னா், சாலி இராக் திரும்பி பல்வேறு அரசப் பதவிகளை வகித்தாா். அந்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவா்களில் ஒருவராக இருந்த சாலி, கடந்த 2018 முதல் 2002-ஆம் ஆண்டுவரை, இராக் அதிபராகப் பதவி வகித்தாா்.

X
Dinamani
www.dinamani.com