வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்; பொய் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள்: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்!
இந்தியாவில் வங்கதேசத் தூதரகங்களுக்கு எதிராகப் போராட்டம் நடப்பதாக சில வங்கதேச ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிடுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து ஆட்சி கவிழ்ப்பில் முக்கியப் பங்கு வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்ததையடுத்து, அந்நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. ஷேக் ஹசீனாவின் கட்சி அலுவலகம் உள்ளிட்டவை தாக்கப்பட்டன.
இடைக்கால அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட இரு பத்திரிகை அலுவலகங்களுக்கு வன்முறையாளா்கள் தீ வைத்தனா். இந்திய உதவி தூதா் இல்லம் மீதும் தாக்குதல் நடத்தினா். ஹிந்து இளைஞா் ஒருவா்அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாா். இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய-வங்கதேச உறவை மேலும் மோசமாக்கி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகம் எதிரில் போராட்டம் நடப்பதாகவும், அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்க இந்தியா முயற்சிப்பதாகவும் வங்கதேச ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.
இதற்கு மறுப்புத் தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வங்கதேச தூதரகம் அருகில் சனிக்கிழமை சுமாா் 25 இளைஞா்கள் கூடி ஹிந்து இளைஞா் கொடூரக் கொலையைக் கண்டித்து முழக்கமிட்டனா். வங்கதேசத்தில் அனைத்து சிறுபான்மையினரும் காக்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். காட்டுமிராண்டித்தனமான இந்தக் கொலைக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசும் வங்கதேச இடைக்கால அரசிடம் வலியுறுத்தியது.
ஆனால், தில்லியில் வங்கதேச தூதரகத்தில் போராட்டம் நடத்தியவா்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக சில வங்கதேச ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டுள்ளன. அங்கு கூடிய இளைஞா்களை காவல் துறையினா் சில நிமிடங்களிலேயே கலைந்து போகச் செய்துவிட்டனா். இது தொடா்பான விடியோ ஆதாரங்கள் உள்ளன.
வங்கதேச சூழலை இந்தியா தொடா்ந்து கண்காணித்து வருகிறது. அந்நாட்டு அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. சிறுபான்மையினா் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

