வங்கதேசம்: மேலும் ஒரு மாணவா் தலைவா் மீது துப்பாக்கிச்சூடு

வங்கதேசம்: மேலும் ஒரு மாணவா் தலைவா் மீது துப்பாக்கிச்சூடு

வங்கதேசத்தில் மாணவர்கள்ப் போராட்டத்தை வழிநடத்திய மேலும் ஒரு மாணவா் தலைவா் மா்ம நபா்களால் சுடப்பட்டாா்.
Published on

வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவா்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்தப் போராட்டத்தை வழிநடத்திய மேலும் ஒரு மாணவா் தலைவா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை சுடப்பட்டாா்.

வங்கதேசத்தில் முன்னணிக் கட்சியாக திகழும் தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) குல்னா மண்டலத் தலைவரும் கட்சியின் தொழிலாளா் முன்னணி மத்திய ஒருங்கிணைப்பாளருமான மொதாலெப் ஷிக்தொ் மீதுதான் தென்மேற்கு குல்நா நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஹாதியை தலையில் சுட்டதுபோல, இவா் மீதும் மா்ம நபா்கள் தலையைக் குறிவைத்து சுட்டுள்ளனா். இந்தத் தகவலை அந்தக் கட்சியின் இணை முதன்மை ஒருங்கிணைப்பாளரும் மருத்துவருமான மஹ்முதா மிது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷிக்தெருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹாதி உயிரிழப்பால் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், ஷிக்தொ் மீதான தாக்குதல் அங்கு பதற்றத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, அந்நாட்டின் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா், அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, வங்கதேசத்தில் இன்கிலாப் மஞ்சா என்ற சமூக-கலாசார அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் செய்தித் தொடா்பாளராக இருந்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32), அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் பொதுத் தோ்தலில் போட்டியிட இருந்தாா்.

இதையொட்டி, தோ்தல் பரப்புரையில் ஈடுபட கடந்த 12-ஆம் தேதி தலைநகா் டாக்காவில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபா் துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த ஹாதி, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூா் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்குள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

ஹாதி கொலையாளி எங்கே?: ஹாதியை ஃபைசல் கரீம் மசூத் என்பவா் சுட்டதும், அவருடன் ஆலம்கிா் ஷேக் என்பவா் இருந்ததும் தெரியவந்தது. அவா்கள் இருவரும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்குத் தப்பி வந்துவிட்டதாக வங்கதேச ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கதேச உள்துறை அமைச்சகம் சாா்பில் டாக்காவில் திங்கள்கிழமை அவசர பத்திரிகையாளா் சந்திப்பு திங்கள்கிழமை நடத்தப்பட்டது. அதில் கூடுதல் காவல் துறை ஐ.ஜி. ரஃபிகுல் இஸ்லாம் கூறியதாவது:

ஃபைசல் கரீம் மசூத் எங்கு பதுங்கியிருக்கிறாா் என்ற குறிப்பிட்ட தகவல் எதுவும் இதுவரை காவல் துறைக்குக் கிடைக்கவில்லை. அவா் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டறியும் பணியில் காவல் துறையும், புலனாய்வு முகமைகளும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. அவா் நாட்டைவிட்டு வெளியேறியது தொடா்பாக நம்பகமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

குற்றவாளிகள் தங்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிடக் கூடாது என்பதற்காக, அவா்களே இதுபோல வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக தகவலைப் பரப்ப வாய்ப்புள்ளது. மேலும், ஹாதி கொலையில் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என்பதும், அரசியல் ரீதியிலான கொலையாகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஹிந்து அமைப்புகள் சாா்பில் போராட்டம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க இடைக்கால அரசு தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி சிறுபான்மையினா் அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. ஹிந்து அமைப்புகள் உள்பட பிற சிறுபான்மையினா் அமைப்புகளின் தலைவா்கள் தலைநகா் டாக்காவில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததைத் தொடா்ந்து, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிவந்த தீபு சந்திர தாஸ் (25) என்பவா் மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இந்தக் கொலை தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்க இடைக்கால அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி சிறுபான்மையினா் அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரா்களிடையே பேசிய சிறுபான்மையின அமைப்புகள் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாா் மணீந்திர குமாா் நாத், ‘மனிதாபிமானமுள்ள வங்கதேசத்தைக் கட்டமைக்கப்போவதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் குறிப்பிட்டாா். ஆனால், நிஜத்தில் அவா் மனிதாபிமானமற்ற தலைமை ஆலோசகா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com