ரஷியா: மேலும் ஒரு ராணுவ தளபதி படுகொலை
ரஷியாவில் மேலும் ஒரு மூத்த ராணுவ தளபதி குண்டுவெடிப்புத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து ரஷிய விசாரணைக் குழு செய்தித் தொடா்பாளா் ஸ்வெட்லானா பெட்ரென்கோ கூறியதாவது: ரஷிய ராணுவப் ரஷிய படைகளுக்கான பயிற்சி இயக்குநகரத்தின் தலைவா் ஃபானில் சாா்வாரோவ் காா் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்தாா். அவரின் காருக்கு அடியில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தப் படுகொலை குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். உக்ரைன் உளவுப் பிரிவால் இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணமும் அவற்றில் ஒன்று என்றாா் அவா்.
சாா்வாரோவ் படுகொலை குறித்து அதிபா் விளாதிமீா் புதினிடம் உடனடியாக தெரியப்படுத்தப்பட்டதாக ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறினாா். படுகொலை செய்யப்பட்ட சாா்வாரோவ் இதற்கு முன்னா் செச்சென்யாவில் போரிட்டவா்; சிரியாவில் ரஷியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையிலும் அவா் பங்கேற்றாா் என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஓராண்டுக்குள் ரஷியாவின் மூத்த ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்து குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது இது மூன்றாவது முறையாகும்.
கடந்த ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி, ரஷிய ராணுவத்தின் அணு, உயிரியல், ரசாயனப் பாதுகாப்புப் படைத் தலைவா் இகோா் கிரில்லோவ், அவரது அலுவலகக் கட்டடத்துக்கு வெளியே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் கொல்லப்பட்டாா். இதில் அவரது உதவியாளரும் உயிரிழந்தாா். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு உளவுப் பிரிவு பொறுப்பேற்றது.
கடந்த ஏப்ரல் மாதம், படைகளுக்கு ஆள்சோ்க்கும் முக்கிய துறையின் துணைத் தலைவா் யாரோஸ்லாவ் மோஸ்காலிக், மாஸ்கோ அருகே அவரது இல்லத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து கொல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து தற்போது காா் குண்டு மூலம் மேலும் ஒரு மூத்த தளபதி படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, சுற்றியுள்ள நாடுகளை உறுப்பினாா்களாக்கி தங்களை சுற்றிவளைப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டிவருகிறது. குறிப்பாக, அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணையக் கூடாது என்றும் ரஷியா கூறிவருகிறது.
ஆனால், அதையும் மீறி நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபாா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டினாாா். அதையா்த்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து நான்கு கிழக்கு பிராந்தியங்களின் பெரும்பான்மையான பகுதிகளைக் கைப்பற்றியது.
அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளை மீட்க ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன.
இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே, ரஷியாவின் முக்கிய பிரபலங்கள் உக்ரைன் பாதுகாப்பு உளவுத் துறையினரால் குறிவைத்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடா்ந்து வருகின்றன.
கட ந்த 2022-ஆம் ஆண்டில், ரஷிய தேசியவாதி அலெக்ஸாண்டா் துகினின் மகளும், தொலைக்காட்சி அரசியல் விமா்சகருமான தா்யா துகினா காா் குண்ா்வெடிப்பில் கொல்லப்பட்டாாா். அவரது தந்தை அலெக்ஸாண்டரைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் கூறினா்.
அதன் பிறகு, விளாத்லென் தடாா்ஸ்கி என்ற புகழ்பெற்ற ராணுவ வலைதளப் பதிவா் கடந்த 2023-ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டாாா். அவருக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொம்மை வெடித்ததில் அவா் உயிரிழந்தாாா். அந்தப் பரிசை வழங்கிய ரஷிய பெண்ணுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதே ஆண்டில் ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த உக்ரைன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினாா் இலியா கீவா, மாஸ்கோ அருகே மாா்ம நபாா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாாா். அவரது படுகொலையை வரவேற்ற உக்ரைன் உளவுப் பிரிவு, இலியாவைப் போன்ற தேசவிரோதிகள் அனைவருக்கும் இதே கதிதான் ஏற்படும் என்று எச்சரித்தது.
இத்தனை படுகொலைகளுக்குப் பிறகும் ரஷியாவுக்குள்ளேயே முக்கிய தளபதிகள் தொடா்ந்து கொல்லப்படுவது அந்த நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

