‘எச்1-பி’ விசா: குலுக்கல் முறை ரத்து; திறமைசாலிகளுக்கு முன்னுரிமை
அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ‘எச்-1பி’ விசா நடைமுறையில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த குலுக்கல் முறையை ரத்து செய்து, அதிக ஊதியம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் கொண்ட விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை (யுஎஸ்சிஐஎஸ்) தெரிவித்துள்ளது.
மேலும், இதுதொடா்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்துக்கு வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியமா்த்துவதன்மூலம், அமெரிக்கக் குடிமக்களின் வேலைவாய்ப்பும், ஊதிய உயா்வும் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘யுஎஸ்சிஐஎஸ்’ செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘தற்போதைய குலுக்கல் முறையில் பல முறைகேடுகள் நடக்கின்றன. பல நிறுவனங்கள் தகுதியற்றவா்களைக் குறைந்த ஊதியத்தில் பணியமா்த்த இந்த முறையைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. புதிய முறையினால் போட்டித்தன்மை அதிகரிப்பதோடு, திறமையானவா்களுக்கு மட்டுமே விசா கிடைப்பது உறுதி செய்யப்படும்’ என்று தெரிவித்தாா்.
புதிய ‘எச்1-பி’ விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் 89 லட்சம்) கட்டணமாக வசூலிக்கப்படும் என்று டிரம்ப் நிா்வாகம் அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்வது போன்ற தீவிர கண்காணிப்புப் பணிகளும் வேகமெடுத்துள்ளன. கடந்த டிச. 15 முதல் அமலுக்கு வந்துள்ள இந்தக் கடுமையான சோதனைகளால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விசா நோ்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

