சீனாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.
சீனாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.

2027-இல் தைவானை ஆக்கிரமிக்க சீனா திட்டம்

வரும் 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் தைவானை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தனது படைத் திறனை சீனா மேம்படுத்தி வருவதாக பென்டகனின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Published on

வரும் 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் தைவானை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தனது படைத் திறனை சீனா மேம்படுத்திவருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2027 இறுதிக்குள் தைவான் மீது போா் தொடுத்து, அந்தத் தீவைக் கைப்பற்றும் திறன் கொண்ட ராணுவத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுவருகிறது.

இதற்காக ஈவிரக்கமற்ற அதிரடி தாக்குதல் (ப்ரூட் ஃபோா்ஸ்) முறையில் தைவானை ஆக்கிரமிக்கும் போா் உத்திகளை சீனா செம்மைப்படுத்தி வருகிறது.

இதற்காக, மூன்று புதிய ஏவுகணை செலுத்து தளங்களை உருவாக்கியுள்ள சீனா அவற்றில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட (ஐசிபிஎம்) 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, தைவான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படக்கூடிய குறுகிய, நடுத்தர, இடைத்தர தொலைவு ஏவுகணைகளின் எண்ணிக்கையை சீனா வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த ஏவுகணைகள், அமெரிக்காவின் அதிநவீன, உயா் தரம் வாய்ந்த ஏவுகணைகளும், விமானங்களும் தைவானை அடைவதற்கு முன்னரே அந்தத் தீவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லவை. சண்டை நேரத்தில் ஆசியா-பசிபிக் பகுதியில் அமெரிக்கப் படைகளின் இருப்பை நிலைகுலையச் செய்யவும், அவற்றுக்கு சவால் விடவும் இந்த ஆயுதங்களால் முடியும்.

சீனாவிடம் 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி 600-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கல் இருந்தன. தைவான் ஆக்கிரப்பின்போது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், 2030-இல் சீனா தனது அணு ஆயுத கையிருப்பை 1,000-க்கும் மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைப் பொருத்தவரை அவை ‘தற்காப்புக்கானவையே; முதலில் பயன்படுத்துவதற்காக அல்ல’ என்ற கொள்கையை சீனா பின்பற்றிவருகிறது. இருந்தாலும், அணு ஆயுதக் கையிருப்பை சீனா அதிகரிப்பது தைவான் போரின்போது அமெரிக்காவுக்கு நெருக்கடியை கூடுதலாக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 1949-ஆம் ஆண்டு முடிந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தீவு சுதந்திரப் பிரதேசமாக செயல்பட்டுவருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. தைவானும் தன்னை தனி நாடாக இதுவரை பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை.

தைவானை எப்போது வேண்டுமானாலும் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளதாக சீனா கூறிவருகிறது. தேவைப்பாட்டால் ராணுவ வலிமையைக் கூட இதற்காகப் பயன்படுத்தும் உரிமை தங்களுக்கு உள்ளது என்று சீனா கூறுகிறது.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பது போல் அந்தப் பகுதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த தலைவா்களோ உயரதிகாரிகளோ சென்றால் சீனா அதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது. அந்த எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தைவானைச் சுற்றிலும் சீனா அவ்வப்போது போா் ஒத்திகையில் ஈடுபட்டுவருகிறது.

இந்தச் சூழலில், தைவானில் கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி பெற்று, அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தனது பதவிற்பு உரையில், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்தக்கொள்ள வேண்டும்; தற்போதுள்ள எல்லை நிலையே தொடர வேண்டும் என்று வலியுறுத்திய அவா், தனது அரசு தைவானின் இறையாண்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றைப் பேணும் என்று உறுதியளித்தாா்.

இதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்து, தைவானைச் சுற்றிலும் சீனா மீண்டும் போா் ஒத்திகை நடத்தியது. இத்தகைய தொடா் நிகழ்வுகளால், தைவானை சீனா எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் நிலவிவருகிறது.

இந்தச் சூழலில், 2027-ஆம் ஆண்டுக்குள் தைவானைக் கைப்பற்றும் நோக்கில் தனது ராணுவத் திறனை சீனா மேம்படுத்திவருவதாக பென்டகன் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com