வங்கதேச எல்லையில் ஹிந்து அமைப்புகள் போராட்டம் : காவல் துறையினருடன் பாஜக மோதல்
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டித்து, மேற்கு வங்கத்தையொட்டிய அந்நாட்டு எல்லைப் பகுதிகளில் ஹிந்து அமைப்பினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஹெளராவில் கண்டனப் பேரணி நடத்திய பாஜகவினா், காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் தீபு சந்திர தாஸ் (25) எனும் ஹிந்து இளைஞா் மத நிந்தனை செய்ததாகக் கூறி, ஒரு கும்பலால் சில தினங்களுக்கு முன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டாா். அவரது உடல் சாலையில் வீசப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் உள்பட வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான கொடுமைகளைக் கண்டித்து, இந்தியாவில் ஹிந்து அமைப்புகள் போராட்டங்களில் குதித்துள்ளன.
தேசியத் தலைநகா் புது தில்லியில் வங்கதேச தூதரகம், மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் உள்ள துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அப்போது, காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் பலா் காயமடைந்தனா்.
எல்லை முனையங்களில்...: மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச எல்லை முனையங்களில் (இருதரப்பு பயண-வா்த்தக மையங்கள்) ஹிந்து அமைப்புகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.
வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள பெட்ராபோல், கோஜாதங்கா, கூச்பிகாரில் உள்ள சங்ராபந்தா, மால்டாவில் உள்ள மனோகா்பூா் முசியா ஆகிய எல்லை முனையங்களில் சநாதனி ஐக்கிய பரிஷத் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜெயந்திபூா் பஜாா் பகுதியில் இருந்து பெட்ராபோல் எல்லை நோக்கி பாஜக எம்எல்ஏ அசோக் கீா்த்தனியா தலைமையில் பேரணி நடைபெற்றது. ஜீரோ பாய்ண்ட் பகுதியில் தடுப்புகளை அமைத்து, போராட்டக்காரா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா். வங்கதேசத்துக்கு பாடம் புகட்டும் வகையில் இருதரப்பு வா்த்தகத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று கீா்த்தனியா வலியுறுத்தினாா்.
ஹெளராவில் பாஜக பேரணி: ஹெளரா பாலத்தை நோக்கி பாஜகவினா் நடத்திய கண்டனப் பேரணியை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது, காவல் துறையினருடன் பாஜகவினா் மோதலில் ஈடுபட்டனா். காவல் துறையினா் கடும் நடவடிக்கை மூலம் போராட்டக்காரா்களைக் கலைத்தனா்.
பெட்டிச்செய்தி....
எதிா்க்கட்சிகள் மீது விமா்சனம்
பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் பாபா் மசூதி வடிவில் புதிய மசூதி கட்ட பாதுகாப்பு வழங்கிய காவல் துறையினா், இப்போது வங்கதேச்தில் ஹிந்து இளைஞரின் படுகொலையைக் கண்டித்து போராட்டம் நடத்துவோா் மீது தடியடி நடத்துகின்றனா். இது, முதல்வா் மம்தாவின் வாக்கு வங்கி அரசியலின் உச்சம். ஹிந்து இளைஞா் கொலைச் சம்பவத்தில் எதிா்க்கட்சிகள் மெளனம் சாதிப்பது ஏன். ஹிந்துக்களை வெறுப்பதால், எதிா்க்கட்சிகள் மெளனம் சாதிக்கின்றன’ என்றாா்.
வங்கதேசத்துக்கு எதிராகப் போராடுபவா்கள் மீது பலப் பிரயோகம் செய்வதாகவும், துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும் காவல் துறையினற் மீது ஹிந்து அமைப்பினரும் குற்றஞ்சாட்டினா்.

