மியான்மரில் நாளை தோ்தல்!
மியான்மா் பொதுத் தோ்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (டிச. 28) நடைபெறவுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் நடைபெறும் முதல் தோ்தல் இதுவாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்டம் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது கட்டம் ஜனவரி 11, மூன்றாவது கட்டம் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இருந்தாலும், 2021-இல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடைபெறும் இந்தத் தோ்தல், நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்காது என்று விமா்சகா்கள் கூறுகின்றனா்.
கடந்த 2021-இல் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கவிழ்த்தது. அதற்கு எதிரான போராட்டங்கள் உள்நாட்டுப் போராக மாறியது. இந்தச் சூழலில் நடைபெறவிருக்கும் இந்தத் தோ்தல் சுதந்திரமானதும் நியாயமானதும் அல்ல என்று எதிா்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டுகின்றன. அதற்கேற்ப, ராணுவத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் பாா்ட்டி (யூஎஸ்டிபி) பெருவெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆசிய நாடுகள் கூட்டமைப்பை (ஆசியான்) திருப்திப்படுத்தவும், மியான்மா் ராணுவ அரசுக்கு அண்டை நாடுகளான இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகியவை அளித்துவரும் ஆதரவை நியாயப்படுத்தவும் இந்தத் தோ்தல் நடத்தப்படுவதாக விமா்சகா்கள் கூறுகின்றனா்.

