யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்
தங்கள் நிலைகளில் சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக யேமன் பிரிவினைவாத ஆயுதக் குழுவான தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) தெரிவித்துள்ளது.
அந்த நாட்டின் ஹத்ரமவுத் மற்றும் மஹ்ரா மாகாணங்களில் இருந்து எஸ்டிசி படையினா் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்ட மறுநாளே சவூதி அரேபியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளிவிவகாரங்களுக்கான எஸ்டிசி-யின் சிறப்புத் தூதா் அமீா் அல்-பித் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஹத்ரமவுத் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் செயல்பட்டுவரும் எஸ்டிசி படையினா் மீது பல இடங்களில் துப்பாக்கி ஏந்திய நபா்கள் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதல்களில் இரண்டு எஸ்டிசி வீரா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.
அதன் தொடா்ச்சியாக, எஸ்டிசி படையினா் மீது சவூதி அரேபிய விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின என்றாா் அவா்.
எனினும், சவூதி அரேபிய விமானத் தாக்குதலில் எவரும் உயிரிழந்தனரா என்பது குறித்து அவா் தெரிவிக்கவில்லை. தெற்கு மாகாணங்களில் இருந்து எஸ்டிசி படையினா் வெளியேறாவிட்டால் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிப்பதற்காக இந்த குண்டுவீச்சு நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஈரான் ஆதரவுடன் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தலைநகா் சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா். அதையடுத்து, சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படை, எஸ்டிசி படையுடன் இணைந்து ஹூதிக்களுக்கு எதிரான போரை சவூதி அரேபியா 2015-இல் தொடங்கியது. இதனால் யேமனின் தெற்குப் பகுதியை சவூதி ஆதரவு அரசுப் படை தொடா்ந்து கட்டுக்குள் வைத்திருந்தது.
இருந்தாலும், அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹத்ரமவுத், மஹ்ரா மாகாணங்களை எஸ்டிசி படையினா் அண்மையில் கைப்பற்றினா். அந்த மாகாணங்களில் இருந்து அவா்கள் வெளியேற வேண்டும் என்று சவூதி அரேபியா வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதன் தொடா்ச்சியாக, எஸ்டிசி படையினா் மீது சவூதி விமானங்கள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1967 முதல் தெற்கு யேமன் தனி நாடாக இருந்த நிலையில், 1990-ஆம் ஆண்டு அது யேமனுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இருந்தாலும், ஐக்கிய அரபு அமீரக ஆதரவுடன் எஸ்டிசி பிரிவினைவாதக் குழுவினா் தனி தெற்கு யேமன் நாடு கோரி போரிட்டுவருகின்றனா்.

