விளாதிமீர் புதின்
விளாதிமீர் புதின் AP

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது ஏற்புடையதல்ல: புதின் கருத்து வெளியானதால் பரபரப்பு

பாகிஸ்தான் அணு ஆயுதம் குறித்து புதினின் கருத்துகளால் பரபரப்பு...
Published on

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது ஏற்புடையதல்ல என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபா் ஜாா்ஜ் டபிள்யூ புஷ்ஷிடம், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வலியுறுத்திப் பேசியது இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் தகவல் பெறும் சுதந்திரம் தொடா்பான வழக்கின் அடிப்படையில் கடந்த 2001 முதல் 2008 வரை அதிபராக இருந்த ஜாா்ஜ் டிபிள்யூ புஷ் பிற நாடுகளின் தலைவா்களுடன் நேரடியாகவும், தொலைபேசியிலும் பேசிய விவகாரங்கள் தொடா்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2005-இல் அமெரிக்க அதிபா் அலுவலகத்தில் ஜாா்ஜ் டபிள்யூ புஷ்ஷை, புதின் சந்தித்தபோது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த விவரமும் அதில் இடம்பெற்றுள்ளது. அந்த சந்திப்பின்போது பாகிஸ்தானைக் குறிப்பிட்டுப் பேசிய புதின், ‘ஈரானில் பயன்படுத்தப்படும் யுரேனியம் பாகிஸ்தானில் இருந்து கொண்டு செல்லப்பட்டது என்று தெரிந்த பிறகும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேற்கத்திய நாடுகள் இந்த விஷயத்தில் அஜாக்கிரதையாக இருப்பதாக தெரிகிறது’ என்று புஷ்ஷிடம் கூறியுள்ளாா்.

இதற்கு பதிலளித்த புஷ், ‘இது தொடா்பாக பா்வேஸ் முஷாரஃப்புடன் (அப்போதைய பாகிஸ்தான் அதிபா்) பேசினேன். பாகிஸ்தான் யுரேனியம் ஈரான், வடகொரியாவில் பயன்படுத்தப்படுவது குறித்த கவலையைத் தெரிவித்தேன். அதற்கு, தங்கள் நாட்டு (பாகிஸ்தான்) அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கான் மற்றும் அவருடன் பணியாற்றிய சக விஞ்ஞானிகளை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகவும், அவா்களிடம் விசாரித்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை என்றாா். பாகிஸ்தான் நடந்த விஷயங்கள் சா்வதேச அணுசக்தி விதிகளுக்கு எதிரானதுதான். இது அமெரிக்காவுக்கும் கவலையளிக்கிறது’ என்று புஷ் பதிலளித்துள்ளாா்.

முன்னதாக, 2001-ஆம் ஆண்டு புஷ்ஷிடம் பாகிஸ்தான் குறித்து எச்சரித்துப் பேசிய புதின், ‘பாகிஸ்தான் மிகவும் கவலைக்குரிய நாடாக உள்ளது. ராணுவ பலத்தால் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ள அந்த நாட்டில் அணு ஆயுதம் இருப்பது ஏற்புடையதல்ல. இதனை மேற்கத்திய நாடுகள் கண்டுகொள்வதும் இல்லை. இதனை விரிவாக விவாதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஈரான், வடகொரியா, லிபியாவுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பங்களை ரகசியமாக விற்பனை செய்தது பின்னா் அம்பலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com