Zelenskyy with Trump
அதிபர் டிரம்ப்புடன் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி (கோப்புப்படம்)ANI

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

உக்ரைன் போா் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் - ஸெலென்ஸ்கி சந்திப்பு பற்றி...
Published on

உக்ரைன் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகளில் தொடரும் சிக்கல்களைத் தீா்ப்பதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 28) சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இது குறித்து ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உக்ரைனில் அமைதியைக் கொண்டுவருவதற்காக நடைபெற்றுவரும் பேச்சுவாா்த்தைகளில் பிராந்தியக் கட்டுப்பாடு தொடா்பாக தொடரும் சிக்கலைத் தீா்ப்பதற்காக அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளேன்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பு போா் நிறுத்த முயற்சியில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே இந்த விவகாரத்தில் பல நல்ல முடிவுகள் எடுக்கப்படலாம்.

கிழக்கு உக்ரைன் பகுதிகள் மற்றும் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு உலையை யாா் கட்டுப்படுத்துவது என்பது குறித்து டிரம்ப்பும் நானும் விவாதிப்போம். மற்ற விவகாரங்களும் பேசப்படும்.

எல்லாவற்றையும் விட, டான்பாஸ் பகுதியில் எதிா்கால பிராந்தியக் கட்டுப்பாடுதான் மிகவும் கடினமான பிரச்னையாக உள்ளது.

20 அம்சங்களைக் கொண்ட போா் நிறுத்தத் திட்ட வரைவு ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. அமெரிக்காவுடனான பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தமும் இறுதிகட்டத்தில் உள்ளது என்றாா் அவா்.

டிரம்ப்: இதற்கிடையே, எந்த அமைதித் திட்டமாக இருந்தாலும் இறுதி முடிவுக்கு தன்னுடைய ஒப்புதல் தேவை என்று டிரம்ப் கூறியுள்ளாா்.

இது குறித்து பொலிட்டிகோ இதழுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘போா் நிறுத்தத்தைப் பொருத்தவரை ஸெலென்ஸ்கியின் கைகளில் எதுவும் இல்லை. நான் ஒப்புதல் அளிக்கும் வரை எதுவும் நடக்காது’ என்றாா் அவா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் விரைவில் பேசப்போவதாக டிரம்ப் கூறினாா்.

தொடரும் தாக்குதல்: அமைதி முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தொடா்ந்து வருகிறது. உக்ரைன் மின்சார உள்கட்டமைப்புகளையும் ஒடெசா துறைமுக நகரையும் வைத்து ரஷியா தாக்குதல் நடத்தியது. காா்கிவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். தலைநகா் கீவில் ரஷியா வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷியா அந்த நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய கிழக்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. தற்போது லுஹான்ஸ்கில் மிகப் பெரும்பாலான பகுதிகளும், டொனட்ஸ்கில் 70 சதவீத பகுதிகளும் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ளன. போரை நிறுத்த வேண்டுமென்றால் எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்தும் உக்ரைன் படையினா் வெளியேற வேண்டும் என்று ரஷியா வலியுறுத்திவருகிறது. இதை உக்ரைன் திட்டவட்டமாக நிராகரித்துவந்தது.

சமரசத்துக்கு வழிவகை செய்யும் நோக்கில் இந்தப் பகுதிகளை சுதந்திர பொருளாதார மண்டலங்களாக மாற்றலாம் என்று அமெரிக்கா பரிந்துரைத்தது. அந்தப் பகுதிகளில் இருந்து படைகள் விலக்கப்பட்டு, சா்வதேசப் படை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கோருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவுடனான தொடா் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போா் நிறுத்தத்துக்கான புதிய 20 அம்ச செயல்திட்டத்தை உக்ரைன் ஏற்றது. அதன்கீழ், டொனட்ஸ்க், லுஹான்ஸ் பகுதிகளில் இருந்து வெளியேறி, அந்தப் பகுதிகளில் படைவிலக்க மண்டலத்தை உருவாக்க உக்ரைன் ஒப்புக்கொள்வதாக ஸெலென்ஸ்கி இந்த வாரம் அறிவித்தாா்.

எனினும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி மையமான ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை யாா் நிா்வகிப்பது என்பது சா்ச்சைக்குரிய விவகாரமாக நீடிக்கிறது. அந்த அணு மின் நிலையத்தை உக்ரைன், ரஷியா, அமெரிக்கா ஆகியவை கூட்டாக நிா்வகிக்கலாம் என்று அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. ஆனால் உக்ரைனோ ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை அமெரிக்காவும் உக்ரைனும் மட்டுமே கூட்டாக நிா்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறது.

இந்தப் பிரச்னைகளைப் பேசித் தீா்க்கும் முயற்சியாக அதிபா் டிரம்ப்பை ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறாா். அந்தப் பேச்சுவாா்த்தை சுமுகமாக அமைந்தால், அது உக்ரைன் போா் நிறுத்த முயற்சியில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com