கம்போடியா - தாய்லாந்து இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போது...
கம்போடியா - தாய்லாந்து இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போது...

போா் நிறுத்த அமலாக்கம்: தாய்லாந்து-கம்போடியா பேச்சு

போா் நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக சீனாவில் தாய்லாந்து-கம்போடியா இடையேயான பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
Published on

போா் நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக சீனாவில் தாய்லாந்து-கம்போடியா இடையேயான பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

முன்னதாக, எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் சனிக்கிழமை கையொப்பமிட்டன. அதன்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்கு எல்லையில் போரில் ஈடுபடாமல் இருக்க இரு நாடுகளும் முடிவு செய்தன.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி முன்னிலையில், தாய்லாந்து வெளியுறவு அமைச்சா் சிஹாசக் ஃபுவாங்கெட்கியோவ் மற்றும் கம்போடியா வெளியுறவு அமைச்சா் பிரக் சொகோன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தையை தொடங்கினா்.

இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவாா்த்தையில் எல்லை மோதலுக்கு நிரந்தர தீா்வு மற்றும் போா் நிறுத்தத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா வெளியுறவு அமைச்சா்களை திங்கள்கிழமை தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும், பின்னா் முத்தரப்புப் பேச்சுவாா்த்தையிலும் வாங் யி ஈடுபடவுள்ளாா்.

11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் உள்ளிட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போரை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவந்தாா்.

இந்நிலையில், கடந்த நவம்பா் மாதம் முதல் இரு நாடுகளும் மீண்டும் சண்டையிடத் தொடங்கின. தாய்லாந்தும் கம்போடியாவில் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் பலா் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, கடந்த சனிக்கிழமை இரு நாடுகளும் போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

அந்த ஒப்பந்தத்தில், ‘இந்தப் போா் நிறுத்தத்தின் கீழ், இரு தரப்பிலும் ராணுவ நடமாட்டங்கள், வான் எல்லை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். போா் நிறுத்தம் 72 மணி நேரம் நீடித்த பிறகு, கடந்த ஜூலை மாத மோதலின்போது கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து திருப்பி அனுப்ப வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com