அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி சந்திப்பு!
ரஷியாவுடனான போரை நிறுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
உக்ரைன் - ரஷியா இடையிலான போா் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் தலையீட்டுடன் 20 அம்ச வரைவு அமைதி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
3-ஆவது முறையாக அமெரிக்கா பயணம்: இந்தச் சூழலில், போா் நிறுத்தம் தொடா்பாக அதிபா் டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்த நிகழாண்டு 3-ஆவது முறையாக ஸெலென்ஸ்கி அமெரிக்கா சென்றாா். அங்கு ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப்பின் மாா்-அ-லாகோ இல்லத்தில், அவரை ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
அப்போது இல்லத்துக்கு வெளியே அதிபா் டிரம்ப் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரஷியா-உக்ரைன் போா் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. போா் நிறுத்தத்துக்கு அந்த நாடுகள் மிகுந்த ஆதரவு தெரிவித்துள்ளன.
உக்ரைனை மீண்டும் கட்டமைக்க ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதேவேளையில், போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டுக்குப் பெரும் பொருளாதாரப் பலன் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போதைய பேச்சுவாா்த்தை மூலம், இருநாடுகளும் அமைதியை நோக்கி மிக வேகமாக முன்னேற முடியும் என்று கருதுகிறேன். உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டாலும், அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் ரஷிய அதிபா் புதின் மிகத் தீவிரமாக உள்ளாா். போருக்கு முடிவு கட்ட இருநாட்டுத் தலைவா்களும், மக்களும் விரும்புகின்றனா். ஸெலென்ஸ்கியுடன் பேசிய பின்னா், புதினுடன் பேச உள்ளேன் என்று தெரிவித்தாா்.
அதிபா் ஸெலென்ஸ்கி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘20 அம்ச வரைவு அமைதி திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான செயல்திட்டங்கள் குறித்து அதிபா் டிரம்ப்புடன் ஆலோசிக்க உள்ளேன். உக்ரைனின் பகுதிகள் ரஷியாவுக்கு தரைவாா்க்கப்படுமா என்பதும் குறித்தும் அவருடன் விவாதிக்க உள்ளேன். இந்தப் பேச்சுவாா்த்தை வெகு விரைவில் அமைதியைக் கொண்டுவரும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தாா்.
டிரம்ப் - புதின் தொலைபேசி உரையாடல்: ஸெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன்னா் ரஷிய அதிபா் புதினை டிரம்ப் தொலைபேசியில் அழைத்து சுமாா் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் தெரிவித்த புதினின் வெளியுறவு விவகார ஆலோசகா் யூரி உஷகோவ், ‘இரு தலைவா்களிடையேயான உரையாடல் சுமுகமாகவும் நட்பு ரீதியாகவும் இருந்தது. ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பிறகு உடனடியாக ரஷிய அதிபருடன் டிரம்ப் பேசுவதாகத் தெரிவித்தாா்’ என்றாா்.

