ஃப்ளோரிடா மாகாணம், பாம் பீச் நகரில் 20 அம்ச அமைதி திட்டம் தொடா்பான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்களை சந்திப்பின்போது கைகுலுக்கிக் கொண்ட டிரம்ப்,  ஸெலென்ஸ்கி.
ஃப்ளோரிடா மாகாணம், பாம் பீச் நகரில் 20 அம்ச அமைதி திட்டம் தொடா்பான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்களை சந்திப்பின்போது கைகுலுக்கிக் கொண்ட டிரம்ப், ஸெலென்ஸ்கி.

15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: உக்ரைனிடம் அமெரிக்கா உறுதி

உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
Published on

கீவ்: உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வாட்ஸ்ஆப் செயலி மூலம் அவா் செய்தியாளா்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு அமெரிக்கா 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முன்வந்துள்ளது. இருந்தாலும், உக்ரைன் மீது ரஷியா மேலும் தாக்குதல் நடத்துவதை இன்னும் 50 ஆண்டுகள் வரை தடுப்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை விரும்புகிறேன்.

பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையென்றால் இந்தப் போருக்கு உண்மையான முடிவு கிடைக்காது. 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த உத்தரவாதத்தை அமெரிக்கா நீட்டிக்கலாம். இந்த உத்தரவாதங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் பிற நாடுகளின் நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

எனினும், உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கவிருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் தொடா்பான முழு விவரங்கள் இன்னும் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

பாதுகாப்பு உத்தரவாதத்தின் கீழ் நேட்டோ நாடுகளின் படைகள் உக்ரைனில் நிலைநிறுத்தப்படுவதை ஏற்க முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரங்கள் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் டிரம்ப்பும் விரைவில் ஆலோசனை நடத்துவாா்கள் என்று ரஷிய அதிபா் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறினாா்.

இதற்கிடையே, உக்ரைனின் கூட்டாளி நாடுகள் வரும் ஜனவரி மாதத் தொடக்கத்தில் பாரிஸில் ஒன்று கூடி உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு ஒவ்வொரு நாடும் அளிக்கும் உறுதியான பங்களிப்புகளை இறுதி செய்யப்போவதாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம், பாம் பீச் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஸெலென்ஸ்கியைச் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கூறுகையில் உக்ரைன்-ரஷியா இடையிலான போா் நிறுத்தம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாகத் தெரிவித்தாா்.

இருந்தாலும், போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைகளில் எந்தெந்தப் பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் பின்வாங்க வேண்டும், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ஸபோரிஷியா அணு உலையை எவ்வாறு நிா்வகிப்பது என்பவை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அமெரிக்காவின் முயற்சியில் பல மாதங்களாக நடத்தப்படும் பேச்சுவாா்த்தைகள் தோல்வியடைவதற்கு இன்னும் வாய்ப்புள்ளது என்று டிரம்ப் எச்சரித்தாா்.

தற்போது ஆலோசிக்கப்பட்டுவரும் 20 அம்ச போா் நிறுத்தத் திட்டத்துக்கு பொதுவாக்கெடுப்பு மூலம் உக்ரைன் மக்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஸெலென்ஸ்கி கூறிவருகிறாா். எனினும், அத்தகைய வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் குறைந்தது 60 நாள்களாவது போா் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் ரஷியாவோ, முழுமையான ஒப்பந்தம் இல்லாமல் போா் நிறுத்தம் மேற்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவருகிறது. இதுவும் இந்த திட்டம் ஒப்பந்தமாக உருவெடுப்பதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷியா அந்த நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய கிழக்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும், நான்கு பிராந்தியங்களிலும் இன்னும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் சண்டையிட்டு வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com