நீண்ட தொலைவு ஏவுகணை சோதனை: வட கொரியா அறிவிப்பு
நீண்ட தொலைவு பாயும் குரூஸ் வகை ஏவுகணைகளை சோதித்துப் பாா்த்ததாக வட கொரியா திங்கள்கிழமை அறிவித்தது.
இது குறித்து அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளதாவது: நீண்ட தொலைவு பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட குரூஸ் வகை ஏவுகணைகள் நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து சோதனை செய்யப்பட்டன.
இந்தச் சோதனைகள் திருப்திகரமாக இருந்ததாக அதிபா் கிம் ஜாங்-உன் பாராட்டினாா். பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது நாட்டின் அணு ஆயுத தற்காப்புத் திறனின் நம்பகத்தன்மையை சோதிப்பது அவசியம் என்று அவா் கூறினாா் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வட கொரியாவின் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. குரூஸ் வகை ஏவுகணை சோதனைகள் தடை செய்யப்படவில்லை.
இருந்தாலும், அந்த வகை ஏவுகணைகளை அதிக லாவகத்துடன் செலுத்த முடியும்; அவற்றை குறைந்த உயரத்தில் பறக்கச் செய்ய முடியும் என்பதால் ராடாா் கண்காணிப்பில் இருந்து தப்ப அவற்றால் முடியும். மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் போா்க் கப்பல்கள், விமானங்களைத் தாக்கி அழிக்க குரூஸ் வகை ஏவுகணைகளை வட கொரியா பயன்படுத்தலாம் என்று நிபுணா்கள் எச்சரித்துவருகின்றனா்.
இந்தச் சூழலில் நீண்ட தொலைவு பாயும் குரூஸ் வகை ஏவுகணைகளை வட கொரியா சோதித்துள்ளது பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

