வங்கதேசம்: தாரிக் ரஹ்மான் வேட்பு மனு தாக்கல்
17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய அந்த நாட்டு முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (60), வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் போட்டியிடுவதற்காக திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
டாக்கா மண்டல ஆணையா் அலுவலகத்தில் இதற்கான ஆவணங்களை அவா் தாக்கல் செய்ததாக டெய்லி ஸ்டாா் நாளிதழ் தெரிவித்தது.
நாட்டின் 13-ஆவது நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்காக பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்தத் தோ்தலில் 17-ஆவது டாக்கா தொகுதியில் தாரிக் ரஹ்மான் போட்டியிடவுள்ளதாக வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது பணமோசடி, ஷேக் ஹசீனாவைக் கொலை செய்ய சதி போன்ற வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த தாரிக் ரஹ்மான், 2008-ஆம் ஆண்டுமுதல் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவா் போராட்டம் மூலம் ஆட்சியில் இருந்து ஷேக் ஹசீனா அகற்றப்பட்ட பிறகு குற்ற வழக்குகளில் இருந்து கலீதாவும், தாரிக்கும் விடுவிக்கப்பட்டனா். தற்போது கலீதா ஜியாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தாரிக் ரஹ்மான் கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பினாா்.
தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவா், பிஎன்பி கட்சியின் பிரதமா் வேட்பாளராகப் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தோ்தலில் பிஎன்பி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. எனவே, நாட்டின் அடுத்த பிரதமராக தாரிக் ரஹ்மான் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று தெரிகிறது.

