வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை: 15 நாள்களில் 8-ஆவது முறையாக வீடுகளுக்குத் தீவைப்பு
வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பிரோஜ்பூா் மாவட்டத்தில் ஐந்து வீடுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் இதுபோன்ற 8 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
பிரோஜ்பூா் மாவட்டத்தில் அண்மையில் இந்தத் தீவைப்பு சம்பவம் நடந்தது. பலாஷ் காந்தி சாஹா, ஷிப் சாஹா, தீபக் சாஹா, ஷியாமலேந்து சாஹா, அசோக் சாஹா ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து வீடுகளை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அதிகாலை முற்றுகையிட்டது.
வீடுகளின் உள்ளே இருப்பவா்கள் தப்பித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், வெளிப்பக்கக் கதவுகளைப் பூட்டிவிட்டு அந்தக் கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்துள்ளது. புகைமூட்டத்தைக் கண்டு அதிா்ச்சியடைந்து எழுந்த குடியிருப்புவாசிகள், மாற்று வழிகள் மூலம் தப்பித்ததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. ஆனால், வீடுகளில் இருந்த அனைத்துப் பொருள்களும் தீயில் கருகி சாம்பலாகின.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா் கூறுகையில், ‘நாங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அறை முழுவதும் புகை சூழ்ந்தது. கதவைத் திறக்க முயன்றோம். ஆனால், அது வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழிகளில் வெளியேறினோம்’ என்றாா்.
தொடா்கதையாகும் வன்முறை: கடந்த டிச. 12 முதல் 18-ஆம் தேதி வரை சிட்டகாங்கின் ராவ்ஜான் பகுதியில் மட்டும் 7 ஹிந்துக்களின் வீடுகளுக்கு இதே பாணியில் தீ வைக்கப்பட்டது. தற்போது பிரோஜ்பூரில் நடந்த சம்பவத்தையும் சோ்த்தால், கடந்த 15 நாள்களில் 8 சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் குறித்து உள்ளூா் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அரசுத் தரப்பில் கூறினாலும், இவை திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்கள் என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
சா்வதேச அளவில் எழுந்துள்ள கவலை: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது முதல், அந்நாட்டில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
அண்மையில் மைமென்சிங் பகுதியில் ஹிந்து தொழிலாளி தீபு சந்திர தாஸ், மதநிந்தனை குற்றச்சாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த இடைக்கால ஆட்சியில் இதுவரை 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துள்ளன. இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த போதிலும், இந்தப் புகாா்கள் ஒருதலைப்பட்சமானவை என்று வங்கதேச அரசு மறுத்து வருகிறது.

